நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவள்ளூர், ஜன.4: திருவள்ளூரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து டோல்கேட் பகுதி வரை பூக்கடை, டீக்கடை, பேக்கரி, இனிப்பு கடை, ஓட்டல், மளிகை கடை என சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன்பு பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து பெயர் பலகை மற்றும் கீழ் பகுதியில் விளம்பரப் பலகையை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தனர். நடைபாதை ஆக்கிரமிப்பு காரணமாக பொதுமக்கள் நெடுஞ்சாலை பகுதிகளில் நடந்து சென்றதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து டோல்கேட் பகுதி வரை உள்ள கடைக்காரர்களுக்கு நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை தாங்களே அகற்ற வேண்டும் என முறையாக நோட்டீஸ் கொடுத்தனர். இருப்பினும் கடைக்காரர்கள் யாரும் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை அகற்றவில்லை. இதை தொடர்ந்து நேற்று திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் டி.சிற்றரசு உத்தரவின் பேரில் உதவி கோட்ட பொறியாளர் தஸ்நாவிஸ் பெர்னாண்டோ, வட்டாட்சியர் வாசுதேவன், உதவி பொறியாளர் பிரசாந்த் மற்றும் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரம் மூலம் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் நடைபாதை ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக இடித்து அகற்றினர். இந்த நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யும் பணி திருவள்ளூர் உழவர் சந்தையில் இருந்து டோல்கேட் பகுதி வரை உள்ள சாலையின் இரண்டு புறமும் தொடர்ந்து நடைபெறும் என நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தஸ்நாவிஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்.

The post நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: