×

கோயம்பேடு மார்க்கெட்டில் கழிப்பிட கட்டணம் வசூலிக்க தடை: அரசுக்கு மக்கள் பாராட்டு

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கழிப்பிடங்களில் இனிமேல் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சுமார் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழம் பூ மற்றும் உணவு தானிய பொருட்கள் வருகிறது. மார்க்கெட் முழுவதும் 94 கழிவறைகள் உள்ளன. காய்கறி, பூ மற்றும் பழம் மார்க்கெட்டில் 68 கழிவறகள் மற்றும் 10 சிறுநீர் கழிப்பிடங்கள் உள்ளன. உணவு தானிய மார்க்கெட்டில் 26 கழிப்பிடங்கள் மட்டும் கட்டணமில்லா கழிப்பிடங்கள்.

ஆனால், காய்கறி, பழம் பூ மார்க்கெட்டில் உள்ள கழிப்பிடங்களில் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் மலம் கழிப்பதற்கு 10 ரூபாயும் சிறுநீர் கழிப்பதற்கு 5 ரூபாயும் குளிப்பதற்கு 30 ரூபாயும் கட்டணம் வசூலித்து வந்தனர். இதுகுறித்து வியாபாரிகள், அங்காடி நிர்வாக அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், ‘’கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கட்டணமில்லாத கழிவறைகள் உள்ளதுபோல் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்திலும் கட்டணமில்லாத கழிப்பிடங்கள் செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கோயம்பேடு மார்க்கெட் வளகத்தில் உள்ள 68 கழிப்பிடங்கள் கட்டணமில்லாத கழிப்பிடமாக மாற்றப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிப்பிடத்தில் இனிமேல் கட்டணம் வசூலிப்பது தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கட்டணமில்லாத கழிப்பிடமாக அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனவே, சீக்கிரமாக கட்டணம் இல்லாத கழிப்பிடத்தை ஏற்படுத்தி தர வேண்டும்’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் கழிப்பிட கட்டணம் வசூலிக்க தடை: அரசுக்கு மக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Koyambedu ,Koyambedu market ,Chennai ,Andhra Pradesh ,Karnataka ,Kerala ,Maharashtra ,Tamil Nadu… ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட் பகுதி...