×

சென்னையில் 203 மயானபூமிகளில் தீவிரத் தூய்மைப் பணி: 159.16 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: மாநகராட்சி தகவல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 203 மயானபூமிகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தூய்மைப் பணிகளில் 159.16 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் கட்டட கழிவுகளும், 666 சுவரொட்டிகள் மற்றும் பேனர்களும் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 5,900 மெட்ரிக் டன் திடக்கழிவுகள்அகற்றப்பட்டு வருகிறது.

தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள், கட்டடக் கழிவுகள், சாலையோரங்கள் மற்றும் சாலை மையத்தடுப்புகளில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றுதல், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள், பூங்காக்களில் தூய்மைப் பணிகள், விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல், பெருமளவு குப்பை சேகரமாகும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து, அவ்விடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல், சேதமடைந்த குப்பைத் தொட்டிகளுக்கு மாற்றாக புதிய குப்பைத் தொட்டிகள் வைத்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் மக்களின் சுகாதாரத்தைப் பேணுகின்ற வகையிலும், தூய்மையான நகரமாக விளங்குகின்ற வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் அமைக்கப்பட்ட அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் இரண்டு கட்டங்களாக 21.08.2024 மற்றும் 30.12.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு தீவிரத் தூய்மைப் பணிகள் (Mass cleaning) மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்றுதல், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றுதல், இருக்கைகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தை சுத்தம் செய்து, பேருந்து நிழற்குடைகள் முழுவதையும் தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்தல், நிழற்குடைகளில் உள்ள பழுதுகளை அடையாளம் கண்டு, அவற்றின் அளவீடுகளை கணக்கெடுத்து மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 203 மயானபூமிகளில் இன்று (03.01.2025) காலை 6 மணி முதல் 8 மணி வரை தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தூய்மைப் பணியின் போது, அனைத்து சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் உள்ள குப்பைகள், கட்டடக் கழிவுகளை அகற்றுதல், சுவரொட்டிகள், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் மற்றும் பலகைகள், மண்டிக்கிடக்கும் புல்செடிகள், புதர் செடிகளை அகற்றுதல், இதர தேவையற்ற பொருட்களை அகற்றி சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 203 மயானபூமிகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தூய்மைப் பணிகளில் 93.38 மெட்ரிக் டன் குப்பைகள், 65.78 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள், என மொத்தம் 159.16 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், 666 சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 

The post சென்னையில் 203 மயானபூமிகளில் தீவிரத் தூய்மைப் பணி: 159.16 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : 203 mayanabomigs ,Chennai ,Metropolitan Chennai Municipality ,Mayanabomigs ,
× RELATED மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள...