விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,248 மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் புதுமை பெண் திட்டம் விரிவாக்கத்தில் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் புதுமை பெண் திட்டம் விரிவாக்கத்தின் கீழ் தமிழ் வழியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டை வழங்கும் விழா ஆட்சியர் பழனி தலைமையில் நடந்தது.
எம்எல்ஏக்கள் மஸ்தான், லட்சுமணன், மணிக்கண்ணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கி ஆட்சியர் பழனி கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், கிராமப்புற மாணவிகள் உயர்கல்வி வரை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், உயர்கல்விக்கு பணம் ஒரு பொருளாதார தடையாக இருந்துவிடக்கூடாது என்கிற உயர்ந்த நோக்கத்தில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில், அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தின் கீழ், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில், உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து அரசு, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் கடந்த 5.9.2022 முதல் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக 56 கல்லூரிகளை சார்ந்த 4,174 மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து 2ம் கட்டமாக 8.2.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, இத்திட்டத்தின் கீழ், 72 கல்லூரிகளை சார்ந்த 3,138 மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து 3ம் கட்டமாக 62 கல்லூரிகளை சார்ந்த 3,282 மாணவிகள் நடப்பு மாதம் வரை ரூ.1,000 பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு தற்போது வரையில் தமிழ்நாட்டில் 4.25 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 11,594 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, புதுமைப்பெண் திட்டம் அரசு பள்ளிகளில் படித்துள்ள மாணவியர்களுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவியர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் தற்போது விரிவுப்படுத்தப்படுகிறது. இதன் பயனாக தமிழ்நாடு முழுவதும் 75,028 மாணவியர் மாதம் ரூ.1,000 பெற்று பயனடையவுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தின் கீழ், 65 கல்லூரிகளிலிருந்து 1,248 மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் ரூ.12,48,000 நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர முடியாத மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு, பெற்றோரின் பொருளாதார சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது.
மாணவியர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கிறது. இத்திட்டத்தின் பயனாக மாணவியர்கள் அதிகளவில் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். மேலும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவியர்கள் உயர்கல்வி படிப்பை சிறப்பான முறையில் மேற்கொண்டு தேர்ச்சியடைவதோடு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிடும் வகையிலும் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஷீலாதேவி சேரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post புதுமை பெண் திட்டம் விரிவாக்கம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,248 மாணவிகளுக்கும் இனி மாதம் ₹1,000 உதவித்தொகை appeared first on Dinakaran.