தமிழ் மொழியில்லாமல் வணிக நிறுவனங்கள் பெயர் பலகை வைத்தால் சட்டப்படி நடவடிக்கை: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு

 

ஊட்டி, டிச.28: நீலகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழாவின் ஒரு பகுதியாக வணிக நிறுவனங்கள், சங்கங்களுடனான கூட்டம் ஊட்டியில் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தொழிலாளர் உதவி ஆணையர் (தோட்டங்கள்) லெனின் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை கண்காணிப்பாளர் வசந்தகுமாரி மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் சுபத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கம், உணவக உரிமையாளர் சங்க நிர்வாகிகள், வணிகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947ன் படி வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ்-ஆங்கிலம்-பிற மொழிகள் 5:3:2 என்ற விகிதத்தில் அமைய ேவண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதனை மீறும் நிறுவனங்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஊட்டியில் உள்ள மாவட்ட நூலகத்தில் தமிழ் மொழிச்சட்ட வார விழா நிகழ்ச்சி நடந்தது.

வாசகர் வட்டத்தலைவி அமுதவல்லி தலைமை வகித்து ஆட்சி மொழி குறித்து கருத்துரை வழங்கினார். நூலகர் ரவி முன்னிலை வகித்தார். சக்தி சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார். கவிஞர்கள் நீலமலை ஜேபி, மணிஅர்ஜுணன், அரசு கலை கல்லூரி மாணவர்கள் மாணிஷா, சுதிர், நூலகர்கள் சிவாஜிநஞ்சன், கண்ணாகன் ஆகியோர் உரையாற்றினர். தமிழ் வளர்ச்சித்துறை முத்து செல்வி நன்றி கூறினார். புலவர் நாகராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். நாட்டுபண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

The post தமிழ் மொழியில்லாமல் வணிக நிறுவனங்கள் பெயர் பலகை வைத்தால் சட்டப்படி நடவடிக்கை: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: