ஆர்.கே.பேட்டை சமத்துவபுரத்தில் புதர்மண்டிய அங்கன்வாடி மையம் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சமத்துவபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில், அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25 மாணவர்களும், குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த, அங்கன்வாடி மையத்தை சுற்றி செடி, கொடிகள் மற்றும் மரங்கள் அதிகளவில் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டது.

இதனால், அடிக்கடி விஷ ஜந்துக்கள் அங்கன்வாடி மையத்திற்குள் நுழைந்து விடுகின்றன. மேலும், குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு ஆளாகின்றனர். அங்கன்வாடி மையத்தில் உள்ள கழிப்பறை பழுதடைந்து காணப்பட்டதால், குழந்தைகள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால், அங்கன்வாடி மையத்தில் புதர்மண்டி காணப்படும் செடிகளை அகற்றவும், கழிப்பறை சீரமைக்க கோரியும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் கேட்டு பலமுறை ஆர்.கே.பேட்டை ஒன்றிய நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், முட்புதரில் இருக்கும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என்று ஆர்.கே.பேட்டை ஒன்றிய நிர்வாகத்திற்கு, சமத்துவபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கடந்த 20ம் தேதி படத்துடன் செய்தி நாளிதழில் வெளியானது. இச்செய்தி எதிரொலியின் காரணமாக அங்கன்வாடி மையத்தை சுற்றி அதிகளவில் வளர்ந்துள்ள செடி கொடிகள் மற்றும் மரங்கள் அகற்றி சீரமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ – மாணவிகள், தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

The post ஆர்.கே.பேட்டை சமத்துவபுரத்தில் புதர்மண்டிய அங்கன்வாடி மையம் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: