மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையம் இன்று அண்ணா பல்கலையில் விசாரணை

* சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் விரைவில் பணியை தொடங்குகின்றனர்

சென்னை: மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது விசாரணையை தொடங்குகின்றனர். மேலும், நீதிமன்றம் அமைத்த 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளும் தங்களது விசாரணையை விரைவில் தொடங்க உள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 24ம்தேதி இரவு காதலனுடன் இருந்த மாணவி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டார்.

இதுகுறித்து புகார் அளித்த 24 மணி நேரத்தில் சென்னை பெருநகர போலீசார் விசாரித்து குற்றவாளி கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் (37) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஐபிசி சட்டப்பிரிவில் இருந்து பிஎன்எஸ் சட்டப்பிரிவால் ஏற்பட்ட தொழில்நுட்ப தாமதத்தை பயன்படுத்தி எப்ஐஆர் பதிவிறக்கம் செய்தது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் தனியாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்டு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. அந்த குழுவில் அண்ணாநகர் துணை கமிஷனர் சினேகாபிரியா, ஆவடி துணை கமிஷனர் ஐமன் ஜமால், சேலம் மாநகர துணை கமிஷனர் பிருந்தா ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இந்த விசாரணை குழு தனது விசாரணையை விரைவில் தொடங்க உள்ளது.

கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்கள், குற்றவாளியின் வாக்குமூலம், புகார் அளித்த மாணவியின் வாக்குமூலம் உள்ளிட்ட விவரங்களை 3 ஐபிஎஸ் அதிகாரிகள் விசாரணை குழுவிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும், தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து மாணவி பாலியல் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அதற்கான விசாரணையை இன்று தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர்கள் தொடங்குகின்றனர்.

இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் வந்தனர். பிறகு இன்று காலை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்களான மம்தா குமாரி, பிரவின் சிவானிடோ ஆகியோர், பாதிக்கப்பட்ட மாணவி, அண்ணாபல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுவினரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தையும் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். அத்துடன் விசாரணை அதிகாரியான அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் குற்றவாளியை கைது செய்த போலீசார் குழுவினரிடமும் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர்கள் விசாரணை நடத்த உள்ளனர்.

 

The post மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையம் இன்று அண்ணா பல்கலையில் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: