பள்ளி, கல்லூரிகளில் 5 ஆயிரத்து 153 போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

*சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு

*53 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 53 பேர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து எஸ்பி ஜெயக்குமார் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:திருவாரூர் மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பாண்டில் முக்கிய ரவுடிகளான பரவக்கரை அய்யப்பன், சுதாகர், மனோ என்கிற மனோநிர்மல்ராஜ், கட்டபிரபு, ராகுல், கோபிநாத், தயா என்கிற தயாநிதிமாறன், மாதவன், சூளை முத்துக்குமார், விக்கி என்கிற விக்னேஷ்வரன், மாட்டு முருகானந்தம் என்கிற முருகானந்தம் உள்ளிட்ட 206 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 335 ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக வருவாய் கோட்டாச்சியர் முன்னிலையில் நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டு அவர்களின் நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு தொடர் குற்ற செயல்களில் ஈடுப்பட்ட 53 பேர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நடப்பாண்டில் ரவுடிகள் தொடர்பான கொலை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

திருவாரூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 22 கொலை வழக்குகளும் உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் நிகழ்ந்தவையாகும். இந்த வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகள் உடன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் 204 திருட்டு வழக்குகள் இதுவரையில் பதிவு செய்யப்பட்டு இந்த திருட்டு வழக்குகள் தொடர்புடைய 378 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ரூ.81 லட்சத்து 50 ஆயிரத்து 170 மதிப்புள்ள களவு சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இதுவரையில் மொத்தம் ஆயிரத்து 508 சிசிடிவி கேமராக்கள் போலீஸ் மூலம் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகள் 4 ஆயிரத்து 846 பதிவு செய்யப்பட்டு 4 ஆயிரத்து 931 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் 249 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தவகையில் 863 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 876 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமிருந்து ரூ 31 லட்சத்து 52 ஆயிரத்து 580 மதிப்பில் 1543.950 கிலோ எடையிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைபொருட்கள் தொடர்விற்பனையில் ஈடுபட்ட 330 கடைகளுக்கு காவல்துறையின் பரிந்துரையின் பேரில் சீல் வைக்கப்பட்டு அபராத தொகையான ரூ 78 லட்சத்து 75 ஆயிரம் அரசால் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா விற்பனை தொடர்பாக 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 253 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 65.205 கிலோ எடையிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருட்களின் தீமைகள் குறித்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் 5 ஆயிரத்து 153 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் மதுகடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 146 வாகனங்கள் மற்றும் பொது இடங்களில் கேட்பாரற்று கிடந்த 154 வாகனங்கள் என மொத்தம் 300 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்ட நிலையில் ரூ 36 லட்சத்து 55 ஆயிரத்து 838 அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய வகையில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2 ஆயிரத்து 229 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சைபர் குற்றங்களாக மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரையில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதில் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்குகளின் குற்றவாளிகள் பயன்படுத்திய வங்கி கணக்குகளிலிருந்து ரூ 2 கோடியே 74 லட்சத்து 31 ஆயிரத்து 736 முடக்கம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையில் ரூ 38 லட்சம் நீதிமன்றம் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓப்படைக்கப்பட்டுள்ளது. சைபர் விழிப்புணர்வு தொடர்பான ஆயிரத்து 496 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இது போன்று மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

The post பள்ளி, கல்லூரிகளில் 5 ஆயிரத்து 153 போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் appeared first on Dinakaran.

Related Stories: