வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் நிறைவு பெற்ற பணிகள் பிப்ரவரியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் முடிவு பெறவுள்ள பணிகள், முதற்கட்டமாக அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலை, தீவுத்திடலில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 3.10 ஏக்கர் நிலப்பரப்பில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.104 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் இயற்கை வனப்புடன் கூடிய நவீன நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்கங்கள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகள் கொண்ட கட்டிடம் கட்டும் இடத்தை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத்தலைவர் ஸ்ரீராமுலு, தலைமைத் திட்ட அமைப்பாளர் ருத்ரமூர்த்தி, கண்காணிப்புப் பொறியாளர் பாலமுருகன், மண்டல அலுவலர்கள் பரிதா பானு, முருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை தீவுத்திடலில் 1.60 லட்ச சதுர அடி பரப்பளவில் 40 கடைகள், 200 இருசக்கர வாகனங்கள் மற்றும் 200 நான்கு சக்கர வாகனங்கள் என வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதே போல் இந்த கட்டிடத்தில் 90 கழிவறைகள் கட்டப்பட உள்ளது. குறிப்பாக திருநங்கைகளுக்கென தனி கழிப்பறை வசதியும் இந்த கட்டிடத்தில் ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த கட்டுமான பணிகள் நிறைவுபெறும் பொழுது 40 அரங்குகள் சுமார் 1000 சதுர அடி நிலப்பரப்பில் அமைய உள்ளது. 2025 பிப்ரவரி மாதம் முடிவு பெற உள்ள பணிகள் படிப்படியாக மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது. அந்தவகையில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த பணிகளானது வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் நிறைவு பெற்ற பணிகள் பிப்ரவரியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: