விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் தடையை மீறி தேமுதிக பேரணியால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து, அவரது நினைவிடம் நோக்கி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பேரணி நடத்த இருந்தனர். ஆனால் இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து காவல் துறையை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், தெற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரிடம் பேரணி செல்வதற்கு அனுமதி தர வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் அனுமதி மறுக்கப்பட்டதால் தடையை மீறி பேரணி நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையாக நீண்ட தூரத்துக்கு நின்றது. வடபழனியில் இருந்து திருமங்மங்கலம் செல்லும் சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

இதையடுத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனிடையே தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி கூறுகையில், ‘‘விஜயகாந்த் மறைந்து நேற்றுடன் ஓராண்டாகிறது. அவரது நினைவிடத்தில் கேப்டன் ஆலயம் உருவாக்கி பூஜை செய்து அன்னதானம் வழங்கி வருகிறோம். முதலாம் ஆண்டு நினைவு தினத்தை குரு பூஜையாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் குரு பூஜையாக அனுசரித்து வருகிறோம்.

மவுன அஞ்சலியுடன் மாநில தேர்தல் ஆணையம் அருகில் இருந்து பேரணியாக வர கடந்த 5ம் தேதி அனுமதி கேட்டிருந்தோம். நேற்று மாலை அனுமதி மறுக்கப்பட்டது. இது கண்டிக்கத்தக்கது’’ என்றார். அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜ தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், திரைப்பட இயக்குநர்கள் பேரரசு, ஆர்வி உதயகுமார், எழில், விக்ரமன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

* ‘பேரணி விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம்’
குரு பூஜையில் கலந்துகொள்ள திமுக சார்பில் முதல்வர் என்னை அனுப்பியுள்ளார். கலைஞர் தயாரித்த, கதை வசனத்தில் நடித்தவர். கலைஞருக்கு விழா எடுத்து, தங்க பேனா வழங்கி சரித்திரம் படைத்தவர். காவல்துறை அனுமதி இல்லையென்றாலும் பேரணி நடைபெற்றுள்ளது. அதனால் பேரணி அனுமதி விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

The post விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் தடையை மீறி தேமுதிக பேரணியால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: