கண்டமங்கலம், டிச. 28: விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் கெங்கராம்பாளையம் டோல்கேட்டில் பரிசோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்ற சுமார் ₹6.431 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் இருந்து தொடங்கி எம்எம் குப்பம் வரை செல்கிறது. விழுப்புரத்தில் இருந்து 134 கிராமங்கள் வழியாக நாகப்பட்டினம் செல்கிறது. இந்நிலையில் சாலை பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்துள்ளது. தற்போது புதுச்சேரி மார்க்கம் செல்லும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் அதன் வழியாக பயணித்து வருகின்றன.
கெங்கராம்பாளையம் பகுதியில் மேம்பாலப் பணிகள் 90% முடிந்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பால பணிகள் ஒருபக்கம் முடிந்து போக்குவரத்து செல்கின்றன. இந்நிலையில் வரும் ஜனவரி மாதத்திலிருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை 6ம்தேதி ஒன்றியஅரசு வெளியிட்டிருந்தது. அதன்படி விழுப்புரம்- புதுச்சேரி இடையே 29 கி.மீ. தூரம் செல்லும் இந்த 4 வழிச்சாலை உபயோகிப்பாளர் கட்டணம் வரும் ஜனவரி 3 முதல் வசூலிக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதுச்சேரி திட்ட அமலாக்கபிரிவு இயக்குனர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கெங்கராம்பாளையம் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு பரிசோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் 8 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வழித்தடத்தில் வாகனங்களை அனுப்பி முறையாக சிக்னல் வேலை செய்கிறதா? என்பதை பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த திடீர் சோதனை ஓட்டத்தால் வாகன ஓட்டிகளுக்கும் சோதனை செய்த ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் வாகனங்கள் குறிப்பிட்ட நேரம் என்று செல்கிறதா? நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தடுப்பு கட்டைகள் விளக்கிக் கொள்ளப்படுகிறதா? என்று சோதித்துப் பார்த்தனர். இந்த சோதனையால் அறிவிக்கப்பட்ட 3ம்தேதி சுங்கக் கட்டணம் கட்டாயம் வசூலிக்கப்படும் என தெரியவருகிறது.
இதுகுறித்து மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பரசுராமன் கூறுகையில், கண்டமங்கலம், திருவண்டார்கோயில், மதகடிப்பட்டு ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் உள்வாங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு சர்வீஸ் சாலை வழியாக சென்று வருகின்றன. திருபுவனைபகுதியில் ஒருபுறம் சர்வீஸ் சாலை போடப்படாமல் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சுங்க கட்டணம் வரிவசூல் செய்யும் டோல்கேட் பகுதியில் ஆய்வு பணிகள் நடைபெறுவது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சர்வீஸ் சாலைகளை போட்டபிறகு டோல்கேட் திறக்க வேண்டும் என்றனர்.
The post விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் கெங்கராம்பாளையம் டோல்கேட்டில் பரிசோதனை ஓட்டம் appeared first on Dinakaran.