கோபி: கோபி அருகே பெட்ரோல் பங்க்கில் கம்பி வேலியில் மின்கசிவு காரணமாக வேன் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் கிட்டுசாமி மகன் ராம்கி (34). இவர், சொந்தமாக சரக்கு வேன் வைத்து ஓட்டி வந்தார். ராம்கிக்கு, நிரோஷா(30) என்ற மனைவியும் ரிதன்யா (12) என்ற மகளும் வியாஸ் (10) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை சத்தியமங்கலம் பகுதியில் இருந்து வாழைத்தார் லோடு ஏற்றிக்கொண்டு காசிபாளையம் வந்த ராம்கி, அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் வழக்கம்போல் வேனிற்கு டீசல் நிரப்பி உள்ளார்.
அதன் பின்னர் வேறு டிரைவர் மூலமாக வேனை சென்னைக்கு அனுப்பிய ராம்கி, வேனில் இருந்த வாழைத்தார் ஒன்றை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு, பெட்ரோல் பங்க்கில் கம்பிவேலி அருகே குடிநீர் குழாயில் கையை கழுவி உள்ளார். அப்போது மின் விளக்கிற்காக கொடுக்கப்பட்ட மின்சார வயரில் ஏற்பட்ட மின்கசிவு கம்பிவேலி முழுவதும் பரவியிருந்ததால் கை கழுவிக்கொண்டு இருந்த ராம்கியின் கை கம்பி வேலியில் பட்டதும், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீண்டநேரத்திற்கு பிறகே ராம்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவயிடத்துக்கு சென்று ராம்கியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோபி அருகே பெட்ரோல் பங்க்கில் மின்சாரம் தாக்கி வேன் உரிமையாளர் பலி: குழாயில் கை கழுவியபோது சோகம் appeared first on Dinakaran.