அம்பை: 2 வாரங்களுக்கு பிறகு இன்று முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதியளித்துள்ளது. நெல்லை மாவட்டத்தின் பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த டிச.13ம்தேதி முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்து, தண்ணீர் வரத்து சீராக இருப்பதால் 2 வார கால இடைவெளிக்கு பின்னர் இன்று (27ம்தேதி) முதல் சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
The post மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.