நீலகிரியில் மேகமூட்டம், சாரல் மழை: குன்னூரில் சுற்றுலா தலங்கள் களைகட்டியது


ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் பகல் நேரத்தில் வெயிலும், இரவில் உறை பனி தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனி கொட்டி தீர்த்தது. இதனால், புல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், பூங்காக்களில் அதிகாலை நேரங்களில் செடிகளில் பனித்துளிகள் காணப்பட்டது. உறை பனி காரணமாக குளிரும் அதிகரித்தது. அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் குளிரால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று முதல் மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மேகமூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், குந்தா போன்ற பகுதிகளில் நேற்று மாலை முதல் கடும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

குன்னூர்
தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக குன்னூர் சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின்நோஸ், லாம்ஸ்ராக் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பூங்காக்களில் உள்ள வண்ணமயமான மலர்களை கண்டு ரசித்து வருவதுடன், சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் சிம்ஸ் பூங்காவில் உள்ள படகு இல்லத்தில் உற்சாக படகு சவாரி செய்து வருகின்றனர். ஆனால், குன்னூரில் தற்போது மேகமூட்டம் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக டால்பின்நோஸ், லாம்ஸ்ராக் போன்ற காட்சிமுனை பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், இயற்கையை ரசிக்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

The post நீலகிரியில் மேகமூட்டம், சாரல் மழை: குன்னூரில் சுற்றுலா தலங்கள் களைகட்டியது appeared first on Dinakaran.

Related Stories: