போதுமான மழை பொழிவால் அமோக  விளைச்சல் அடைந்த சிறுதானியங்கள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக சிறுதானிய பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் காட்டுபன்றிகள் தொல்லையால் இழப்பு ஏற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்பயிருக்கு அடுத்தப்படியாக காட்டு விவசாயம் எனப்படும் சிறுதானிய பயிர்கள் பயிரிடப்படுகிறது. குறைந்த தண்ணீரில், குறுகிய காலத்தில் வளரக்கூடிய இந்த பயிர்கள் கடந்த காலங்களில் தொடர் வறட்சியால் பாதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் விவசாயம் செய்யாமல், தரிசு காடாக விடப்பட்டது. அதில் சீமை கருவேல மரம் வளர்த்து வந்தது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை போதியளவு பெய்தது. இதனால் மழைநீர் மற்றும் நீர்நிலைகளில் பெருகி கிடந்த தண்ணீரின் துணையோடு பயிரிடப்பட்ட சிறுதானியம் சோளம் வகை பயிர்கள், குதிரைவாலி, கம்பு, கேள்வரகு உள்ளிட்ட பயிர்கள் நல்ல மகசூல் கிடைத்தது. எதிர்பார்த்த விலைக்கு போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதனால் இந்தாண்டு மாவட்டம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் ஏக்கரில் சிறுதானிய பயிர்களை பயிரிட்டனர். காலம் தாழ்ந்து பருவமழை துவங்கியதால், பயிர்கள் முளையிட தாமதமானது. இந்நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு நல்ல மழை பெய்தது. இதனால் சிறுதானிய பயிர்கள் நன்றாக வளர்ந்து வருகிறது. கமுதி,கடலாடி, முதுகுளத்தூர் போன்ற பகுதிகளில் காய்த்து மகசூல் நிலையை எட்டியுள்ளது.இதுகுறித்து சாயல்குடி பகுதி விவசாயிகள் கூறும்போது.

நெல் மட்டுமே முக்கிய விவசாய பயிராக பயிரிட்டு வந்தோம். களை எடுத்தல், உரமிடுதல், பூச்சி கொல்லி மருந்து தெளித்தல் போன்ற விவசாய பணிகளை செய்வதற்கு கூடுதலாக பணம் செலவழித்தும் கூட, தொடர் மழை, போதிய மழை, தண்ணீரின்றி ஆண்டுதோறும் விவசாயம் பொய்த்து போனது. தொடந்து நஷ்டத்தை சந்தித்து வந்தோம். இதனால் குறைந்தளவு பராமரிப்பு செலவுள்ள சோளம் வகைகள், கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற சிறுதானிய பயிர்களை கடந்தாண்டு பயிரிட்டோம். தொடர் மழையால் பயிர்கள் நன்றாக வளர்ந்து, நல்ல மகசூல் கிடைத்தது.

இதனால் இந்தாண்டு கூடுதலான தரிசு நிலங்களை சீரமைத்து சிறுதானியங்களை பயிரிட்டோம். தற்போது நன்றாக வளர்ந்து வருகிறது. தற்போது மகசூல் நிலையை எட்டியுள்ளது. இன்னும் 15 நாட்களில் அறுவடை நிலையை எட்டி விடும். ஆனால் சிறுதானியங்களை காயப்போடுதல், பிரித்தெடுத்தல் போன்றவற்றிற்கு உலர்களம் கிராமங்களில் இல்லை. சாலையில் போட்டு உலர்த்துவதால் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுவதுடன், வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

மேலும் சிறுதானிய பயிர்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்வது கிடையாது. எனவே சிறுதானியங்களை விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலையில் அரசு விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கிராமங்கள் தோறும் சிறுதானிய பயிர் உலர்களம் அமைக்க வேண்டும் என்றனர்.

நிவாரணம் வேண்டும்

கடலாடி,முதுகுளத்தூர், கமுதி பகுதியிலுள்ள ஆறு, ஓடை வழித்தடங்களில் காணப்படும் சீமை கருவேல மரக்காட்டில் காட்டுப்பன்றிகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மகசூல் நிலையை எட்டியுள்ள சிறுதானிய பயிர்களை உண்ணுவதற்காக அழித்து நாசமாக்கி வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் மற்றும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றனர்.

The post போதுமான மழை பொழிவால் அமோக  விளைச்சல் அடைந்த சிறுதானியங்கள் appeared first on Dinakaran.

Related Stories: