மல்லப்புரம் மலைச்சாலையில் புதிய தடுப்புசுவர் கட்ட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வருசநாடு: மயிலாடும்பாறை மல்லபுரம் மலைச்சாலையில் தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி, மதுரை ஆகிய இரண்டு மாவட்டங்களை இணைக்கும் சாலையாக மயிலாடும்பாறை மல்லபுரம் மலைச்சாலை உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மலைக்கிராமங்களைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள், மல்லப்புரம் பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர்.

மேலும், மயிலாடும்பாறை பகுதிகளில் விளைகின்ற விவசாய விளைபொருட்களான தக்காளி, அவரை, பீன்ஸ் போன்ற காய்கறி பயிர்களை உசிலம்பட்டி, பேரையூர், சிவகங்கை, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு மலப்புரம் மலைச் சாலை வழியாக விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் மலைச்சாலையில் தடுப்புச் சுவர் இல்லாததால் வாகனங்கள் செல்லும் போது, இடது மற்றும் வலதுபுறம் சாலையோர பள்ளங்களில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

மேலும் சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதினால் விவசாய பொருட்களை குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து உப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அனார் கூறுகையில், எங்கள் பகுதியில் இருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பேரையூர், மல்லப்புரம், பகுதிகளுக்கு சென்று வருகின்றன. தடுப்புச் சுவர் இல்லாததால் மலைச்சாலையில் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post மல்லப்புரம் மலைச்சாலையில் புதிய தடுப்புசுவர் கட்ட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: