இதில், சாதாரண டவுன் பஸ்களைவிட கட்டணம் அதிகம்தான். ஆனால், அதற்கு ஏற்ப இந்த பஸ்களில் இருக்கை வசதி உள்ளிட்ட நவீன சொகுசு வசதிகள் உள்ளன. இவற்றில், சில பஸ்களில், `அலர்ட் மெசேஜ்’ ஒலிக்கும் வசதியும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, வரப்போகும் அடுத்த பஸ் ஸ்டாப் எது? என்பதை பயணிகளுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது கேட்கும் அதே ஓசை, மாநகர டவுன் பஸ்களிலும் கேட்கிறது. இந்த அறிவிப்பு, பயணிகளுக்கு மிகுந்த பயன்அளிக்கும் வகையில் உள்ளது.
சாதரண வகை பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள், குறிப்பாக வெளியூர்களில் இருந்து வருகை தரும் பயணிகள், “ஐயா… நான் இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் வந்தவுடன் சொல்லுங்க…’’ என கண்டக்டரிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள் அல்லது சக பயணிகளிடம் இதே கோரிக்கையை முன்வைத்து, தாங்கள் இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப்புகளை கேட்டு தெரிந்துகொள்வார்கள். இது, சில பயணிகளுக்கு எரிச்சலூட்டும் வகையில்கூட இருக்கலாம். ஆனால், அதுபோன்ற சம்பவத்துக்கே இந்த பஸ்களில் இடமில்லை. யாரிடமும் தகவல் கேட்காமல், நாமாகவே அறிந்துகொள்ளும் வகையில், இந்த அலர்ட் மெசேஜ் பயணிகளை தயார்படுத்துகிறது. படிப்பறிவு இல்லாத ஏழை கிராம மக்கள்கூட மிக எளிதாக அடையாளம் கண்டு, அந்தந்த பஸ் ஸ்டாப்புகளில் இறங்கும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது.
இந்த நவீன வசதியை, சொகுசு பஸ்கள் மட்டுமின்றி, சாதாரண பஸ்களிலும் அமல்படுத்த வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. இதுபற்றி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட அதிகாரிகள் கூறுகையில்,“ஜிபிஆர்எஸ் என்னும் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சேவை வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில், மாநகரில் சில சொகுசு பஸ்களில் மட்டும் இந்த சேவை வழங்கப்படுகிறது. தற்போது, மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை புதுப்பிப்பு பணி நடந்து வருகிறது. ஒருசில இடங்களில் ‘டேக் டைவர்சன்’ நிலை உள்ளது. அனால், இந்த சேவையை உடனடியாக பிற பஸ்களிலும் அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. படிப்படியாக இந்த சேவை அனைத்து பஸ்களுக்கும் விரிவுபடுத்தப்படும்’’ என்றனர்.
The post மாநகர டவுன் பஸ்களில் ஒலிக்கும் `அலர்ட் மெசேஜ்’: இதர பஸ்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை appeared first on Dinakaran.