பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு சான்று பெறாமல் கனிமங்களை இருப்பு வைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை

பெரம்பலூர்,டிச.25: உரிய பதிவுச்சான்று பெறாமல் ஜல்லி மற்றும் செயற்கை மணல் உள்ளிட்ட கனிமத்தை இருப்பு வைத்து வியாபாரம் செய்தல் மற்றும் உரிய நடைச்சீட்டு இல்லாமல் வாகனங்களில் எடுத்துச் செல்லுதல் கண்டறியப்பட்டால் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது :
தமிழ்நாடு சட்டவிரோத சுரங்கங்கள், கனிம போக்குவரத்து மற்றும் சேமித்தலை தடுத்தல் மற்றும் கனிம விநியோகஸ்தர்கள் விதிகள் 2011-ன்படி எந்த ஒரு கனிமத்தையும் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் செய்து, கனிம விநியோகஸ்தராக பதிவு செய்து, கனிம சேமிப்பு கிடங்கு அனுமதி பெற்று, மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் நடைச் சீட்டு (Transit Pass) பெற்று கனிமங்களை வாகனங்களில் எடுத்துச் செல்ல வேண்டும்.

மாவட்ட கலெக்டரிடம் உரிய பதிவுச் சான்று மற்றும் அனுமதி பெறாமல் கனிமங்களை இருப்பு வைத்தல் மற்றும் உரிய நடைச்சீட்டின்றி வாகனங் களில் எடுத்துச் செல்லுதல் ஆகியவை தமிழ்நாடு சட்ட விரோத சுரங்கங்கள், கனிம போக்குவரத்து மற்றும் சேமித்தலை தடுத்தல் மற்றும் கனிம விநியோகஸ்தர்கள் விதிகள் 2011-ன்படி அபராதம் மற்றும் தண்ட னைகுரிய குற்றமாகும்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்அரவை தொழிலகங்களின் (Crusher) உரிமையாளர்கள் தங்களது கல் அரவை தொழிலகங்களில் (Cursher units) அரைக்கும் ஜல்லி கற்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய தமிழ் நாடு சட்டவிரோத சுரங்கங்கள், கனிம போக்குவரத்து மற்றும் சேமித்தலை தடுத்தல் மற்றும் கனிம விநியோ கஸ்தர்கள் விதிகள் 2011ன்படி படிவம் A (Form A)-ல் மாவட்டக் கலெக்டரிடம் விண்ணப்பம் செய்து கனிம சேமிப்பு கிடங்கு பதிவுச் சான்று பெற்று பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் நடைச்சீட்டு பெற்று கனிம இருப்பு கிடங்குகளில் இருந்து எடுத்துச் செல்ல அறிவுறுத் தப்படுகிறது.

கனிம இருப்பு கிடங்கு பதிவுச்சான்று பெற விண்ணப்பிக்க, இருப்பு கிடங்கு இயங்கி வரும் புல எண்ணின் புல வரைபடம், கூட்டு வரைபடம், சிட்டா, அடங்கல், “ அ” பதிவேடு ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்ப கட்டணம் ரூ.10,000-ஐ கீழ் கண்ட கணக்கு தலைப்பில் செலுத்தி அசல் செலுத்துச் சீட்டுடன் பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக மாவட்டக் கலெக்டருக்கு விண்ணப் பித்து பதிவுச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய கணக்கு தலைப்பு :
0853-Non Ferrous Mining & Metallurgical Industries
102 Mineral Concession Fees Rents and Royalties
AA Quarries and Minerals
(D.P. Code, 0853-00-102-AH-22705) ஆகும்.

மேலும், உரிய பதிவுச் சான்று பெறாமல் ஜல்லி மற்றும் செயற்கை மணல் உள்ளிட்ட கனிமத்தை இருப்பு வைத்து வியாபாரம் செய்தல் மற்றும் உரிய நடைச்சீட்டு -இல்லாமல் வாகனங்களில் எடுத்துச் செல்லுதல் கண்டறியப் பட்டால் கனிமம் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு மேற்படி விதிகளின் கீழ் அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு சான்று பெறாமல் கனிமங்களை இருப்பு வைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: