‘பன்முகத்தன்மை புறக்கணிப்பு’ தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நியமனத்தில் அதிருப்தி: கார்கே, ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் கடந்த 18ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்குழுவின் பரிந்துரைப்படி தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியனை நியமித்து ஜனாதிபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

இதில், எதிர்க்கட்சி தலைவர்களின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நடைமுறைக்கு கடும் அதிருப்தி தெரிவித்து, எதிர்க்கட்சி தலைவர்களான கார்கே, ராகுல் காந்தி அப்போதே கூட்டத்தில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அதில், கார்கே, ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் தேர்வு நடைமுறை, அடிப்படையிலேயே குறைபாடுடையதாக உள்ளது. இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் பரஸ்பர ஆலோசனை, கருத்தொற்றுமையின் படி முடிவு எடுக்க வேண்டுமென்ற பாரம்பரியத்தை புறக்கணித்து, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தேர்வுக்குழுவின் நம்பகத்தன்மை, நேர்மை, பாரபட்சமற்ற கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

தலைவர் பதவிக்கு, அரசியலமைப்பு சட்டத்தில் ஆழ்ந்த அறிவாற்றலும், உறுதியான பொறுப்புடைமையும் கொண்ட சிறுபான்மை பார்சி இனத்தை சேர்ந்த நீதிபதி ரோஹிங்டன் பாலி நாரிமன், தனி மனித சுதந்திரம், ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பல்வேறு தீர்ப்புகளை வழங்கிய சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோசப் ஆகியோரை பரிந்துரைத்தோம். உறுப்பினர் பதவிக்கு சமூக நீதியை பாதுகாக்கும் முக்கிய தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர் முரளிதர் மற்றும் சிறுபான்மை முஸ்லிம் மதத்தை சேர்ந்த நீதிபதி குரேஷி ஆகியோரை பரிந்துரைத்தோம். எங்கள் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை்.

விவாதத்தை ஊக்குவித்து, கூட்டு முடிவை உறுதி செய்வதற்கு பதிலாக கூட்டத்தில் எழுப்பப்பட்ட நியாயமான கவலைகள், எதிர்பார்ப்புகளை புறக்கணித்து, பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படுவது ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. இவ்வாறு கூறி உள்ளனர்.

The post ‘பன்முகத்தன்மை புறக்கணிப்பு’ தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நியமனத்தில் அதிருப்தி: கார்கே, ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: