வேளாங்கண்ணியில் இன்றிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி: பக்தர்கள் குவிந்தனர்


நாகை: வேளாங்கண்ணியில் இன்றிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் முக்கிய இடத்தை வகித்து வருகிறது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. வேளாங்கண்ணி கீழை நாடுகளில் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (25ம் தேதி) கொண்டாடப்பட்டுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயம் சேவியர் திடலில் இன்றிரவு 11.30 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இதைதொடர்ந்து மறையுரை, கூட்டு திருப்பலி நடக்கிறது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகளை பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்குத்தந்தைகள் நடத்துகின்றனர்.

திருப்பலிகளின் நிறைவில் ஏசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ், குழந்தை ஏசு சொரூபத்தை பக்தர்களுக்கு காண்பிப்பார். இதில் பங்கேற்க வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து கிறிஸ்தவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். வேளாங்கண்ணி பகுதி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. பேராலய வளாகத்தில் மின்அலங்கார பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

The post வேளாங்கண்ணியில் இன்றிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி: பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: