சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கவும், பறக்கும் ரயில் திட்டம் அமைக்கும் திட்டம் 1985ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக இத்திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 1997ம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ₹266 கோடியில் அமைக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக ₹877.59 கோடியில் மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரை தொடங்கப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 3ம் கட்டமாக 2008ம் ஆண்டு ₹495 கோடியில் வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையே பணிகள் தொடங்கியது. மொத்தம் 5 கிலோ மீட்டர் தூரத்தில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. திட்டமிட்டப்படி பணிகள் 2010ல் முடியாததால் இதற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்தது. அதனை தொடர்ந்து நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் மூலம் தீர்வுகாணப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கு முன்னதாகவே புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இங்கு ரயில் பாதை சிக்னல் கட்டமைப்புகளும் முடிவடைந்தன. பணிகள் எஞ்சியுள்ள பகுதியில் தூண்கள் அமைத்து, அதற்குமேல் பாதைகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கு அமைக்கப்பட்ட தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரயில் பாலம் திடீரென சரிந்து பாரம் தாங்காமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
அதன்படி பல்வேறு பிரச்னைகள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் 16 ஆண்டுகளுக்கு பின் முடிவு நிலையை எட்டியுள்ளது. அதன்படி வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் பறக்கும் ரயில் சேவை திட்டம் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மேலும் கூறியதாவது: வேளச்சேரி முதல் ஆதம்பாக்கம் வரையிலான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கான ₹734 கோடியில் பணிகள் நடைபெற்றது. ஆனால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகளை மேற்கொள்ள ₹30 கோடி செலவிடப்பட்டது. இந்த ரயில் பாதையானது கடற்கரை முதல் தாம்பரம் புறநகர் மின்சார ரயில் பாதையின் மேல் அமைகிறது.
அதனை தொடர்ந்து இந்த திட்டத்தில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்க தயாராக உள்ளன. இதில் 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 167 தூண்கள் உடன் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் வரிசையாக பிரம்மாண்டமான தூண்கள் அமைத்து, மேம்பாலம் இணைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியின் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏற்கனவே 250 மீட்டர் தூரத்திற்கு 28 தாங்கும் பாலங்கள் அமைக்கப்பட்ட நிலையில் மொத்தம் 36 தாங்கும் பாலங்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளதால் இந்த திட்டமானது முழுமையாக முடிக்கப்பட்டு வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய ரயில் முனையமாகும் பரங்கிமலை
மேலும் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வழித்தடம் பரங்கிமலை ரயில் நிலையம் வழியாக செல்கிறது. இதற்கான ரயில் பாதை, தற்போது அமைக்கப்படும் வேளச்சேரி பறக்கும் ரயில் பாதைக்கு மேல் உயர்மட்டத்தில் அமைக்கப்பட உள்ளது. எனவே, இதைப் பார்க்கவே பிரம்மாண்டமாக இருக்கும். அத்துடன், பறக்கும் ரயில், கடற்கரை – தாம்பரம் ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிகள், ரயில் மாறி பயணம் செய்வதற்கு பரங்கிமலை ரயில் நிலையம் ஒரு முக்கிய முனையமாக மாறுகிறது.
The post வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் வரும் மார்ச் மாதம் முதல் தொடக்கம்: 16 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெறுகிறது appeared first on Dinakaran.