இதன் அடுத்தபடியாக 2035ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ஸ்பேட்எக்ஸ் எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ஸ்பேட்எக்ஸ் திட்டத்திற்கான ராக்கெட் ஏவுதல் வரும் டிச.30ம் தேதி நடைபெறுவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:
பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் மூலம் தலா 220 கிலோ எடை கொண்ட இரண்டு சிறிய விண்கலன்கள் ஏவப்படவுள்ளன. இந்த விண்கலன்கள் புவியில் இருந்து சுமார் 470 கி.மீ தூரம் கொண்ட வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளன. அதன்பின் அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் மொத்தம் 66 நாட்கள் நடைபெறும். நிலவில் இருந்து மாதிரி எடுத்து திரும்புதல், இந்தியாவின் விண்வெளி மையம் உருவாக்குதல் மற்றும் இயக்கம் போன்ற இந்தியாவின் விண்வெளி லட்சியங்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் அவசியம்.
ஒரே குறிக்கோளை கொண்டு விண்ணில் செலுத்தப்படும் பல ராக்கெட் திட்டங்களை ஒருங்கிணைக்க இது உதவும். ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, விண்கலன்களை பொருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்திற்கு ராக்கெட் கொண்டு வரப்பட்டுள்ளது. திட்ட ஆய்வுக் குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஏவுதலுக்கான செயல்பாடுகள் தொடங்கும். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம், ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தைக் கொண்ட நான்காவது நாடாக இந்தியா முன்னேறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் முக்கிய திட்டம்; ஸ்பேட்எக்ஸ் திட்டத்திற்கான ராக்கெட் டிச.30ம் தேதி ஏவப்படும் appeared first on Dinakaran.