6வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று, தமிழக அரசு 2009ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு சிறுதொழில் கழகமான டான்சி நிறுவன ஓய்வூதியதாரர்களுக்கான பணிக்கொடை ₹3 லட்சத்து 50 ஆயிரம் என்பது ₹10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.இதை எதிர்த்து டான்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 34 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், 6வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் பணிக்கொடை உயர்வு அரசு ஊழியர்களுக்கு 2006 முதல் அமல்படுத்தப்படும் நிலையில், டான்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு 2010 முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது பாரபட்சமானது என்பதால், உயர்த்தப்பட்ட பணிக்கொடையை 2006ம் ஆண்டு முதல் கணக்கிட்டு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், பணிக்கொடைச் சட்டப்படி, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு உயர்த்தப்பட்ட பணிக்கொடை 2010ம் ஆண்டு முதல் பெற உரிமை உள்ளதாக உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, டான்சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் எந்தத் தவறும் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post உயர்த்தப்பட்ட பணிக்கொடையை டான்சி நிறுவன ஓய்வூதியதாரர்களுக்கு 2006 முதல் வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.