கிறிஸ்துமஸ் பண்டிகை எதிரொலி: திருப்புவனம், ஆறுமுகனேரி கால்நடை சந்தையில் ஆடு, கோழிகள் விலை உயர்வு!

சிவகங்கை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருப்புவனம் கால்நடை சந்தை, ஆறுமுகனேரி ஆட்டுச் சந்தையில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு, கோழிகளின் விலை உயர்ந்துள்ளது. விஷேச தினங்களில் ஆடு, கோழி, சேவல் வாங்க சந்தைக்கு அதிக அளவில் மக்கள் வருவது வழக்கம். மக்கள் அதிகளவில் வந்திருந்தாலும் திருப்புவனம் சந்தைக்கு கால்நடைகளின் வரத்து குறைந்தே இருந்ததால் விற்பனை மந்தமாக காணப்பட்டது. 10 கிலோ எடை உள்ள ஆடு ரூ.8,000 முதல் ரூ.10,000க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒன்றைரை கிலோ கோழி ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது.

திருச்செந்தூர் அருகே ஆறுமுகனேரி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ஆடுகள் விலை அதிகமாக இருந்த நிலையிலும் விற்பனை களைகட்டியது. 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விற்பனையாகியது. ஸ்ரீவைகுண்டம், ஏரல், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்தனர்.

The post கிறிஸ்துமஸ் பண்டிகை எதிரொலி: திருப்புவனம், ஆறுமுகனேரி கால்நடை சந்தையில் ஆடு, கோழிகள் விலை உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: