விமான தாமதம், ரத்து ஆவதற்கு இழப்பீடுகள் வழங்குவதாக பயணிகளை ஏமாற்றும் நூதன மோசடி கும்பல்: இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை

சென்னை: விமானங்கள் தாமதம், ரத்து ஆவதற்கு இழப்பீடுகள் வழங்குவதாக ஏமாற்றும் நூதன மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பயணிகளை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் தாமதம், ரத்து போன்றவை இருந்து வந்தன.

இதை பயன்படுத்திக் கொண்டு, மோசடி கும்பல் பாதிக்கப்பட்ட விமான பயணிகளிடம் செல்போனில் தொடர்புகொண்டு, இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் என்று கூறி, விமான பயண தாமதம் அல்லது ரத்துக்கு இழப்பீடு தர முடிவு செய்துள்ளோம் என்று கூறி அப் பயணிகளின் ஆதார், பான் எண், வங்கி கணக்கு போன்ற விவரங்களை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து ஆனதற்கு தகுந்த இழப்பீட்டுத் தொகையை கொடுக்கப் போவதாக, போலியான செல்போன் அழைப்புகள் மூலம், பயணிகளை ஏமாற்றி வருகின்றனர்.

இதற்கும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. இதுபோன்ற இழப்பீடுகள் கொடுக்கும் திட்டமும் இல்லை. எனவே போலியான போன் கால்கள் வந்தால், பயணிகள் யாரும் நம்ப வேண்டாம். எனவே இதுபோன்ற போலியான போன் அழைப்புகள் வருமேயானால், உடனடியாக, உள்ளூர் காவல் நிலையத்தில், அந்த தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு, பயணிகள் புகார் செய்யலாம் என விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

The post விமான தாமதம், ரத்து ஆவதற்கு இழப்பீடுகள் வழங்குவதாக பயணிகளை ஏமாற்றும் நூதன மோசடி கும்பல்: இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: