ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா ஜேபிசியின் முதல் கூட்டம் ஜனவரி 8ம் தேதி நடக்கிறது

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (ஜேபிசி) முதல் கூட்டம் வரும் ஜனவரி 8ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா கடந்த 17ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

பாஜ எம்பி பி.பி.சவுத்ரி தலைமையிலான கூட்டுக்குழுவில் 39 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் தரப்பில் பிரியங்கா காந்தி, மணிஷ் திவாரி, ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோரும், திமுக சார்பில் பி.வில்சன், செல்வகணபதி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் வரும் ஜனவரி 8ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இக்குழு விரிவாக ஆலோசனை நடத்தி 3 மாதத்தில் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கும். ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு நாடாளுமன்றத்தில் பல மசோதாக்கள் எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்படுகிறது.

அவையில் அமளியை பயன்படுத்தி, பல முக்கிய மசோதாக்கள் ஓரிரு நிமிட விவாதத்துடன் நிறைவேற்றப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இப்படிப்பட்ட சூழலில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, கடந்த 2015ம் ஆண்டிலிருந்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட 12வது மசோதா என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா கூடுதல் ஆய்வுக்காக கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா ஜேபிசியின் முதல் கூட்டம் ஜனவரி 8ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: