மாயாண்டியை பின் தொடர்ந்து துரத்தி வந்த அந்த கும்பல் நீதிமன்ற வாயிலில், அவரை சரமாரியாக வெட்டியும், அவரது முகத்தை சிதைத்தும் கொடூரமாக தாக்கியது. இதனால், சம்பவ இடத்திலேயே மாயாண்டி உயிரிழந்தார். இதுதொடர்பாக, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது, நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கொல்லப்பட்டவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒரு குற்றவாளியை சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.
அப்போது, குற்றம் நடப்பதற்கு முன்பாகவே அதனை காவல்துறையினர் தடுக்க வேண்டும். மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மாவட்ட நீதிமன்றங்களில் ஏற்கனவே போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார். இதையடுத்து, திருநெல்வேலி சம்பவம் தொடர்பாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் நாளை (இன்று) இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
The post நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலையான சம்பவம் தொடர்பாக அறிக்கை: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.