நெல்லியாம்பதி மலைப்பாதையில் குட்டியுடன் உலா வந்த யானை சுற்றுலா பயணிகள் பரவசம்

பாலக்காடு : நெல்லியாம்பதி மலைப்பாதையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை சுற்றுலா பயணிகளை பெரிதும் பரவசப்படுத்தியது. பாலக்காடு மாவட்டம், நெம்மாராவை அடுத்து நெல்லியாம்பதி சுற்றுலா தலம் உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக நெம்மாரா – நெல்லியாம்பதி – நெம்மாரா காட்டுவழி சாலையில் குட்டியுடன் பெண் காட்டு யானை, சாலையோரங்களில் உலா வந்தது. இந்த யானையை சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் இருந்தபடியே மொபைல் போன்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த வழித்தடத்தில் அடிக்கடி காட்டு யானைகள் கூட்டமாக நடக்கிறது. மேலும், சிறுத்தை, காட்டு மாடு, புள்ளி மான்கள், கடமான்கள், குரங்குகள், சிங்கவால் குரங்குகள், மயில்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இதனை காலை, மாலை நேரங்களில் அதிகளவில் காண முடிகின்றன. நெல்லியாம்பதி சுற்றுலா தலத்தில் டீ, காப்பி, மிளகு, ரப்பர், ஆரஞ்சு, காலிப்பிளவர், பேஷன் புரூட் தோட்டங்கள் பயணிகளுக்கு ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. மேலும், சீதாராம் குன்று, மலையருவிகள், போத்துப்பாறை, வியூ பாயின்ட், போத்துண்டி அணை காட்சி முனை உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

நெம்மாராவில் இருந்து செல்லும்போது போத்துண்டி அணை, பூங்கா அமைந்துள்ளது. இதனையும் சுற்றுலா பயணிகள் ரசித்தபடி வந்து பார்த்து செல்கின்றனர். இதனையடுத்து இதே வழித்தடத்தில் போத்துண்டி பகுதியில் வனத்துறையின் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இங்கு வனத்துறையினர் வாகனங்களை சோதனை செய்த பின்னரே, தொடர்ந்து மலைப்பாதையில் செல்ல அனுமதி வழங்குகின்றனர்.

காலை 6 மணி முதல் மாலை 6 வரையில் மட்டுமே காட்டுவழி சாலையில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், காட்டுவழி பாதையில் வன விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கையும், அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.

The post நெல்லியாம்பதி மலைப்பாதையில் குட்டியுடன் உலா வந்த யானை சுற்றுலா பயணிகள் பரவசம் appeared first on Dinakaran.

Related Stories: