ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்?சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

மதுரை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. கடந்த மாதம் தான் பொங்கல் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த பட்டய கணக்காளர் (CA) தேர்வு தேதியை போராடி மாற்றினோம். இப்பொழுது மீண்டும் இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது.

தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள “யுஜிசி – நெட்” தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் வருகிறது. ஜனவரி 14 அன்று பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் என தொடர் விடுமுறை இருந்தும் மேற்கண்ட தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் காலம் என்பது தமிழர்களுடைய பண்பாட்டோடு, உழவர் பெருமக்களின் உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்டத்தோடும் தொடர்புடையதாகும். ஆகவே இந்த தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது மிகப்பெரும் சிரமங்களை தங்களுக்கு தரும் என்று தேர்வர்களும், பெற்றோர்களும் என்னை தொடர்பு கொண்டு தலையீட்டை நாடி உள்ளனர்.

ஆகவே இந்தத் தேர்வு தேதிகளை மாற்றுமாறு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கும், தேசிய தேர்வு முகமை பொது இயக்குனர் பிரதீப் சிங் கரோலா அவர்களுக்கும் கடிதங்களை எழுதி உள்ளேன் என்று சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

The post ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்?சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: