சிவகங்கை, டிச. 20: சிவகங்கை நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் துரைஆனந்த்(திமுக) தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையாளர் கிருஷ்ணாராம் மற்றும் நகராட்சி அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன்(திமுக) மற்றும் 7வது வார்டு உறுப்பினர் காந்தி (திமுக) ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்து நகராட்சி அலுவலக வாசல் முன்பு வந்தனர். நகர்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 1வது வார்டு உறுப்பினர் மகேஷ்குமார்(காங்) நகர்மன்ற கூட்டத்தில் தன்னை பேச விடாமல் தடுத்தாகவும், தான் தாக்கப்பட்டதாகவும் கூறி நகராட்சி அலுவலக வாசல் முன்பு வந்தார். இதனால் நகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நகர் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து சிவகங்கை தாசில்தார் சிவராமன் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் கூறியதாவது, கூட்டத்தில் 27 உறுப்பினர்களில் 25 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் வளர்ச்சிப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர் மகேஷ்குமார் தொடர்ந்து கூடுதல் நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதனால் மைக்கை வாங்கிக் கொண்டு அவரை வெளியேற்றும்படி கூறினோம். மற்றபடி அவரை தாக்கவில்லை, என்றார்.
The post சிவகங்கை நகராட்சி முன்பு துணைத்தலைவர், உறுப்பினர்கள் தர்ணா appeared first on Dinakaran.