வத்திராயிருப்பு அருகே தோப்புகளை சூறையாடிய காட்டுயானை கூட்டம்: தென்னை, வாழை மரங்கள் சேதம்


வத்திராயிருப்பு, டிச.19: வத்திராயிருப்பு அருகே தோப்பிற்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தின. வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வ.புதுப்பட்டி பகுதியில் தென்னை, மா, வாழை விவசாயப் பணிகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வ.புதுப்பட்டி மூலக்காடு பகுதியில் உள்ள ரமா மற்றும் முரளி ஆகியோரின் 15 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் நேற்று முன்தினம் இரவு கம்பி வேலியை பிடுங்கி எறிந்து கூட்டமாக நுழைந்த காட்டு யானைகள் தென்னை மற்றும் மா, வாழை மரங்களை சேதப்படுத்தின.

மாங்காய் சீசன் தொடங்க உள்ள நிலையில் காட்டு யானைகளின் இத்தகைய செயல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விவசாயிகள் கூறுகையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு நுழைந்த காட்டு யானைகள் இதேபோல் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. மீண்டும் நேற்று முன்தினம் இரவு கூட்டமாக யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து முற்றிலும் சேதப்படுத்தியதால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். காட்டு யானைகள் விவசாய பகுதிகளில் புகுந்து அடிக்கடி விளைநிலங்களை சேதப்படுத்துகின்றன.

அதிக அளவில் வாழை, மா, எலுமிச்சை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்துகின்றன. காட்டு யானைகள் விவசாய நிலத்திற்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் மலை அடிவாரப் பகுதிகளில் அகழிகள் மற்றும் சோலார் மின் வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வத்திராயிருப்பு அருகே தோப்புகளை சூறையாடிய காட்டுயானை கூட்டம்: தென்னை, வாழை மரங்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: