மதுரை: மதுரை கோட்டத்தில் தினசரி 6 லட்சம் மகளிர், கட்டணமில்லாமல் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இது பெண்களை முன்னேற்றக்கூடிய திட்டமென முதல்வருக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்லும் மகளிர் என பெரும்பான்மையானோர் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளையே அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையை லாபத்தை கருத்தில் கொள்ளாமல் சேவை நோக்கோடு செயல்படுத்தி வருகிறது.
மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மண்டல அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக பொதுமக்கள் வசதிக்காக நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகள் என பல்வேறு இடங்களுக்கும் பேருந்து சேவை அமலில் உள்ளது. இப்போக்குவரத்துக் கழகத்தின் கீழ், 40 பணிமனைகள் மூலம் 2,386 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சாதாரணப் பேருந்து, விரைவுப்பேருந்து மற்றும் குளிர்சாதனப் பேருந்து போன்ற பல்வேறு விதமான பேருந்து சேவைகள் உள்ளன. இதன்படி, நாளொன்றுக்கு 9.78 லட்சம் கி.மீ தூரம் நிர்ணயிக்கப்பட்டு, மாதத்திற்கு 293.40 லட்சம் கி.மீ தூரம் என, பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினசரி சுமார் 10.61 லட்சம் பயணிகளும், மாதத்திற்கு 3 கோடியே 18 லட்சத்து 30 ஆயிரம் பேர் பயணிக்கும் வகையிலும், மதுரை கோட்டத்தில் அரசு பேருந்துகளின் செயல்பாடுகள் உள்ளன.
இந்நிலையில் தமிழத்தில் ஆட்சிக்பொறுப்பிற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 7.5.2021ல் மகளிருக்காக விடியல் பயணத்திட்டத்தை அறிவித்தார். இதன்படி நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய வழி செய்யப்பட்டது. மேலும், இத்திட்டம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தினசரி 6 லட்சம் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கின்றனர். இதன்வாயிலாக அவர்கள் ஒவ்வொருவரும் மாதாந்திர செலவில் சுமார் ரூ.888 வரை சேமிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாட்டை மேம்படுத்திடும் வகையில், அரசு நிதியில் 5 ஆயிரம் புதிய பேருந்துகளும், ஜெர்மன் அரசின் நிதி உதவியுடன் 2,666 பேருந்துகளும் என, 7,666 புதிய பேருந்துகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது. இதில், மதுரை கோட்டத்திற்கு மட்டும் 1,156 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 2022-23ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.169.92 கோடி மதிப்பீட்டில் 398 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில் ரூ.26.54 கோடி மதிப்பீட்டில் 29 புதிய அதிநவீன தாழ்தள சொகுசுப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. முதல்வரின் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் பயனடைந்த மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை சேர்ந்த நஜிமா என்பவர் கூறும்போது, ‘‘நான் தனியார் பள்ளியில் பணியாற்றுகிறேன். அரசு பேருந்தில் தினசரி பயணித்து வேலைக்கு சென்று வருகிறேன். மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2500 வரை பேருந்து கட்டணமாக செலவானது. எனது மாதச் சம்பளத்தின் ஒரு பகுதியை இதற்காக செலவழித்தேன். தற்போது முதல்வரின் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தின் கீழ், நானும் பயனடைந்து வருகிறேன்.
இதன் மூலம் சேமிக்கப்படும் பணம் எனது குடும்ப தேவைகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. பெண்களை முன்னேற்றக் கூடிய வகையில் இச்சிறப்பு மிக்க திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’’ என்றார். இதேபோல் வாடிப்பட்டியை சேர்ந்த லட்சுமி என்பவர் கூறும்போது, ‘‘ நான் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்க்கிறேன்.இதற்காக தினமும் வாடிப்பட்டியில் இருந்து டவுன் பஸ்சில் மதுரை வந்து செல்கிறேன். எனக்கு குறைந்த அளவிலேயே ஊதியம் கிடைக்கிறது. அதில் பெரும் பகுதியை பேருந்து கட்டணத்திற்கு மாதந்தோறும் செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது.
முதல்வரின் கட்டணமில்லா பயணம் திட்டத்தினால், எனது சம்பளம் முழுமையாக கிடைக்கிறது. இதனுடன் எனக்கு முதல்வர் வழங்கும் ரூ.1000 தொகையும் மாதந்தோறும் கிடைக்கிறது. என் மகள் தற்போது அரசு பள்ளியில் படிக்கிறாள். அவளின் எதிர்காலத்திற்காக பஸ் கட்டணத்தில் கிடைக்கும் ெதாகை மற்றும் ரூ.1000 ஆகியவற்றை வங்கியில் சேமிக்கிறேன். இத்திட்டம் பெண்களின் முன்னேற்றத்திற்கானது என்பதால், முதல்வருக்கு மனம் நிறைந்த நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்’’ என்றார்.
The post அரசு போக்குவரத்துக்கழக மதுரை கோட்டத்தில் தினசரி 6 லட்சம் மகளிர் கட்டணமில்லா பயணம்: முன்னேற்றம் காணும் பெண்கள் முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.