கற்கால மனிதர்கள் கற்கருவிகளை கூர் தீட்டும் பாறை குழிகள் கண்டுபிடிப்பு: குமரியில் தொடர்ந்து தொல்லியல் துறை ஆய்வு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கற்கால மனிதர்கள் தங்கள் கற்கருவிகளை கூர் தீட்டுகின்ற பாறை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தீவிர ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக தொல்லியல் அலுவலர் ஹரி கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். குமரி மாவட்டம் தோவாளை தாலுகா பூதப்பாண்டி அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தொல்லியல் அலுவலர் (பொறுப்பு) ஹரி கோபால கிருஷ்ணன், செம்பவளம் ஆய்வுதளம் கள ஆய்வாளர் பைசல் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்காலமக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கூர்செய்யும் பல குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கற்கால மனிதர்கள் தங்கள் வேட்டையாடுவதற்கும் மரங்களை வெட்டுவதற்கும், குழிகள் தோண்டுவதற்கும் மற்றும் முக்கியமாக வேளாண்மையில் நிலத்தினை உழுவதற்கு ஏர்-கலப்பையாக கற்கருவிகளை பயன்படுத்தினர்.  அப்பணியின் போது முனைகள் உடைந்தும் அல்லது மழுங்கியும் காணப்படும் கற்கருவிகளின் முனைகளை கூர்மைப்படுத்துவதால் உண்டாகும் குழிகளே இவை.

இது போன்ற புதிய கற்காலத்தினை சார்ந்த கருவிகளின் முனைகள் கூர்மைப்படுத்துவதால் ஏற்படும் குழிகள் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றது. குமரி மாவட்டத்தில் இவ்வகை சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். கண்டறியப்பட்ட இக்குழிகளின் அதிகபட்ச நீளம் 15 செ.மீ குறைந்த பட்ட நீளம் 8 செ.மீ மற்றும் அதிக பட்ச அகலமாக 4 செ.மீ குறைந்த பட்ச அகலமாக 3 செ.மீ கொண்டதாக காணப்படுகின்றது. இதன் மூலம் குமரி மாவட்டத்தில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என தெளிவாக அறிய முடிகின்றது.

இந்த பகுதியின் அருகாமையிலேயே சில இடங்களில் இரும்பு காலத்தை சார்ந்த கருப்பு சிவப்பு பானையோடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகளின் உடைந்த சிறுதுண்டுகளும் கிடைத்தன. இவை இப்பகுதிகளில் பல்லாயிரம் வருடங்களாக தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகளை உணர்த்துகிறது. இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என தொல்லியல் அலுவலர் ஹரி கோபாலகிருஷ்ணன் கூறினார். இது தொடர்பாக ஹரி கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ெதால்லியல்துறை ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. பூதப்பாண்டி பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆய்வு செய்யப்பட்டு கற்காலமக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கூர்செய்யும் பல குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வு முடிவுகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே அவை வெளியிடப்படும்’ என்றார்.

The post கற்கால மனிதர்கள் கற்கருவிகளை கூர் தீட்டும் பாறை குழிகள் கண்டுபிடிப்பு: குமரியில் தொடர்ந்து தொல்லியல் துறை ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: