அம்பேத்கர் குறித்த அமித் ஷா-வின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்

சென்னை: அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சை பேச்சை கண்டித்து பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டை குறிக்கும் விதத்தில் மாநிலங்களவையில் உரையாற்றிய அமித்ஷா அம்பேத்கர் பெயரை சொல்வது இப்பொது ஃபேஷன் ஆகிவிட்டதாகவும் அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திற்கு செல்ல உதவி இருக்கும் என்று கேலியாக விமர்சித்தார். இதனை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அரசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அமித்ஷா பதவி விலக வலியுறுத்தியும், அவரது சர்ச்சை பேச்சை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தின் போது கட்சியை சேர்ந்த நிர்வாகி மோசஸ் வளவன் என்பவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் நாகூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக நாகை, நாகூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் விளக்கிக்கொள்ளப்பட்டது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு அமித்ஷாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.இதே போல் தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

 

The post அம்பேத்கர் குறித்த அமித் ஷா-வின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: