கடுமையான குளிர் காலமாக விழாவில் கலந்து கொண்ட உறவினர்கள் போர்த்திக் கொண்டு வந்திருந்தனர். திருமண விழா நடக்கும் இடத்திற்கு மணமகனும், மணமகளும் வந்தனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். மணமகனும் மணமகளும் உணவு பரிமாறும் அறையில் அமர்ந்தனர். அப்போது புரோகிதர், திருமண சடங்குகளை தொடங்கினார். திடீரென மணமகன் அர்னவ் மயங்கி விழுந்தார். அங்கிருந்த குடும்பத்தினர் உடனடியாக அர்னவை சிகிச்சைக்காக தனியறைக்கு அழைத்துச் சென்றனர். உள்ளூர் மருத்துவரும் அழைத்து வரபப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, நிலைமை இயல்பானது.
அதன்பின் திருமண சடங்குகள் நடந்தன. மணமகளுக்கு தாலி கட்டும் நேரத்தில், அர்னவ் தனக்கு தாலி கட்டுவதை மணமகள் அங்கிதா ஏற்கவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ‘எதற்காக அர்னவை ஏற்க மறுக்கிறாய்; கடைசி நேரத்தில் இவ்வாறு கூறுவது ஏன்?’ என்று வினவினர். திருமண விழா பரபரப்பை எட்டியது. அப்போது மணமகள் அங்கிதா கூறுகையில், ‘அர்னவுக்கு ஏதோ உடல் பிரச்னை இருக்கிறது. அதனால் அவரை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே எனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை’ என்றார். மணமகள் அங்கிதாவிற்கு அர்னவின் உடல்நிலை குறித்த சந்தேகம் எழுந்ததால், அவரது உறவினரும் அவருக்கு ஆதரவாக நின்றனர்.
மணமகனின் உறவினர்கள், அர்னவுக்கு ஆதரவாக பேசினர். இதனால் திருமண நிகழ்ச்சிகள் பாதியில் நின்றது. இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறு தீவிரமடைந்து, அதிகாலை 5 மணி ஆகிவிட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர்; ஆனால் முடியவில்லை. இறுதியாக, காலை 8 மணி வரை சர்ச்சை முடிவுக்கு வராததால், திருமணம் நின்றது தான் மிச்சமானது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘கடுமையான குளிர் காரணமாக மணமகன் அர்னவ் மயக்கமடைந்துள்ளார். மற்றபடி அவருக்கு உடலில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று மருத்துவர் கூறினார். ஆனால் மணப்பெண், அர்னவ் உடலில் ஏதேனும் கோளாறு இருப்பதாக கூறி பிரச்னை செய்துவிட்டார். இரு தரப்பிலும் உடன்பாடு எட்டப்படாததால், திருமணம் நின்றுவிட்டது. இருதரப்பிலும் அவரவர் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்’ என்று கூறினார். கடுமையான குளிர் காரணமாக மணமகன் மயங்கி விழுந்து, அதனால் திருமணம் நின்றுபோன சம்பவம் ஜார்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post கடுமையான குளிரால் வந்த வினை; மணமகன் மயங்கி விழுந்ததால் திருமணம் நின்றது: மணமகளின் திடீர் முடிவால் குடும்பத்தினர் வாக்குவாதம் appeared first on Dinakaran.