திருச்செந்தூர் கடல்நீரை வீட்டில் பூஜை அறையில் வைத்து வணங்கலாமா?

?திருச்செந்தூர் கடல்நீரை வீட்டில் பூஜை அறையில் வைத்து வணங்கலாமா?
– பொன்விழி, அன்னூர்.

புனிதத் தலங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்பதைத்தான் சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அதே போல, அந்த தீர்த்தங்களில் இருந்து கொண்டு வரும் நீரை, யாத்திரை முடிந்தவுடன் வீட்டில் ஒரு பூஜை செய்து அருகில் உள்ள உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்க வேண்டும். தீர்த்த யாத்திரை செல்ல இயலாதவர்கள், அந்த நீரை தங்கள் மீது தெளித்துக்கொள்ள ஏதுவாக இந்த ஏற்பாட்டினைச் செய்தார்கள். அவ்வளவுதான்.
மாறாக அந்த நீரைத் தொடர்ந்து வீட்டுப் பூஜை அறையில் வைத்து பூஜைசெய்து வரவேண்டும் என்கிற அவசியம் இல்லை.

?ஒரு சிலர் இறந்தவர்களிடம் பேசலாம் என்கிறார்களே, உண்மையா?
– வண்ணை கணேசன், சென்னை.

இல்லை. இதுபோன்ற விஷயங்களை சாஸ்திரம் அறிந்தவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. துர்மரணங்கள் மற்றும் அகால மரணங்கள் நிகழும்போது இறந்த அந்த ஆத்மாக்கள் இன்னும் சாந்தியடையவில்லை என்பதை ஒரு சில நிகழ்வுகள் மூலம் அவர்களது வாரிசுகள் அறிந்துகொள்ள இயலும். ஆனால், இறந்தவர்களிடம் பேச இயலும் என்ற கருத்தினை சாஸ்திரம் ஏற்றுக் கொள்ளவில்லை.

?ஒரே நட்சத்திரம் குடும்பத்தில் பலருக்கு இருப்பது தோஷமா?
– சு.பாலகிருஷ்ணன், இராமேஸ்வரம்.

வீட்டில் அப்பா – மகன் அல்லது அம்மா – மகள் இவர்களுக்கு ஒரே நட்சத்திரம் அமைந்தால், “ஏகநட்சத்திர சாந்தி’’ செய்து கொள்ள வேண்டும். அம்மாவிற்கும் மகனுக்குமோ அல்லது அப்பாவிற்கும் மகளுக்குமோ ஒரே நட்சத்திரம் அமைந்தால், அதுவும் அவசியமில்லை. இது தவிர, சகோதர – சகோதரிகள் மற்றும் இதர உறவினர்களுக்குள் ஒரே நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தால், அது எந்த விதத்திலும் தோஷத்தைத் தராது. அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

?சண்டிஹோமம் என்று சொல்கிறார்களே, சண்டி என்பது யார்?
– அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

ஆதிபராசக்தி அன்னையின் அம்சம்தான் சண்டிதேவி. அவரை ஆராதித்து செய்யப்படுவதுதான் “சண்டிஹோமம்’’ என்பது. தேவியின் மகத்துவத்தைச் சொல்லும் தேவீ மஹாத்மியம் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வதுடன், ஸ்ரீவித்யா உபாசனையின் அடிப்படையில் சண்டிஹோமம் என்பது நடத்தப்படுகிறது. பெரும்பாலும் உலகநன்மையை வேண்டிய இதுபோன்ற யாகங்கள் நடத்தப்படுகின்றன.

?குதிரை மீது அமர்ந்திருப்பது போல் ஊர் எல்லையில் உள்ள அய்யனார் சிலைகள், காவல் தெய்வங்களா?
– எம்.மனோகரன், ராமநாதபுரம்.

ஆம். குதிரை மீது அமர்ந்திருப்பது போலவும், ஒரு சில இடங்களில் அய்யனார் சிலைகள் கையில் ஆயுதத்துடன் அமர்ந்திருப்பது போலவும் அருகில் குதிரை நிற்பது போலவும் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அய்யனார், முனீஸ்வரன், பிடாரி அம்மன், எல்லையம்மன் போன்ற மூர்த்தங்கள், அந்த ஊரினைக் காக்கும் காவல் தெய்வங்களாகவே கருதப்படுகிறார்கள். புதிதாக ஊருக்குள் நுழைபவர்களும், பிரயாணத்தை துவக்குபவர்களும், பிரயாணம் முடித்து ஊருக்கு திரும்புபவர்களும் இந்த தெய்வங்களை வணங்கி அனுமதி பெற்ற பின்னரே தங்கள் செயல்களைத் தொடர்வார்கள்.

?எங்களுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று புதுவீட்டில் குடியேறி உள்ளோம். மாடிவீட்டில் பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும்?
– அ.ஐஸ்வர்யா சிவா, ராமநாதபுரம்.

அது உங்கள் வீட்டின் அமைப்பைப் பொறுத்தது. பொதுவாக பீரோவை வடக்கு அல்லது வடகிழக்குத் திசையில் வைப்பது நல்லது. அதற்கு ஏற்றாற் போல் அறையில் வசதி இல்லை எனும்போது வடக்குத் திசை நோக்கியோ அல்லது கிழக்குத் திசை நோக்கியோ பீரோவை வைக்கலாம்.

?நவகிரஹங்களில் முதன்மையானது எது? ஜோதிடம் எதன் அடிப்படையில் கணிக்கப்படுகிறது?
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

இரண்டு கேள்விகளுக்கும் சேர்த்து ஒரே பொதுவான விடை சூரியன் என்பதே. “ஜ்யோதிஷ’’ என்ற வார்த்தை மருவி “ஜோதிடம்’’ ஆகிவிட்டது. “ஜ்யோதி’’ என்றால் “ஒளி’’ என்று பொருள். ஒளி அறிவியல் என்பதே ஜோதிடம் எனும் வார்த்தைக்கான பொருள். அந்த ஒளியைத் தருவது சூரியன். சூரியனின் ஒளியை உள்வாங்கி மற்ற கிரஹங்களும் நட்சத்திரங்களும் வெளிப்படுத்துகின்றன. சூரியனைத் தவிர மற்ற கிரஹங்களுக்கு ஒளிவீசும் தன்மை என்பது கிடையாது. மற்ற கோள்களும் நட்சத்திரங்களும் கண்ணாடியைப் போல் சூரியனின் ஒளியை பிரதிபலிக்கின்றன. அவ்வாறு பிரதிபலிக்கும்போது தங்களுடைய குணத்தையும் சேர்த்து வெளிப்படுத்துகின்றன. அந்த கிரஹங்களின் தன்மைக்கு ஏற்றவாறு பூமியில் மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த விதியின் அடிப்படையில்தான் ஜோதிடம் என்பது உருவானது. இதனால் நவகிரஹங்களில் சூரியன் எனும் கிரஹமே முதன்மையானது. ஜோதிடம் என்பதும் சூரியனின் ஒளியை அடிப்படையாகக் கொண்டதே ஆகும்.

The post திருச்செந்தூர் கடல்நீரை வீட்டில் பூஜை அறையில் வைத்து வணங்கலாமா? appeared first on Dinakaran.

Related Stories: