“மறுபிறவி எப்படி இருக்கும்? மறுபிறவி உண்டா? இல்லையா? இதுதான் கடைசிப் பிறவியா? போன்ற விஷயங்களை எல்லாம் ஜாதகத்தில் இருந்து தீர்மானிக்க முடியுமா?” என்று கேட்டார். நான் சொன்னேன்;
“அது கஷ்டம். அதற்கான வாய்ப்பு ஜாதகத்தில் குறைவு’’ என்று சொன்னவுடன், அவர் கேட்டார்;
“அப்படி இல்லையே! சாத்திரப்படி இதுதான் கடைசிப் பிறவியா, இன்னும் பிறவி இருக்கிறதா என்பதை எல்லாம் சொல்லிவிடலாம் என்று சொல்லுகின்றார்களே’’ நான் கேட்டேன்;
“எதை வைத்துக் கொண்டு அதைச் சொல்ல முடியும்? 12ல் கேது இருந்தால், மறுபிறவி இல்லை என்று பொதுப் பலனில் போட்டிருப்பார்கள். அதை வைத்துக் கொண்டு சொல்கிறீர்களா?’’ அதற்கு அவர் சொன்னார்;
“அதுவும் ஒரு காரணம். பொதுவாகவே, 12ஆம் இடம் என்பது மோட்சஸ்தானம் என்றுதானே சொல்லுகின்றார்கள். அந்த இடத்தின் அமைப்பை வைத்துக் கொண்டு, அடுத்த பிறவி உண்டா இல்லையா? எப்பேற்பட்ட பிறவி வரும் என்பதைச் சொல்லிவிடலாமே’’ என்று சொன்னார். அதற்கு நான், அவருக்கு விளக்கம் கொடுத்தேன்.
“நீங்கள் நினைப்பது போல் அது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அடுத்த பிறவியை உங்கள் ஜாதகம் தீர்மானிக்காது. அடுத்த பிறவியை உங்கள் செயல்கள்தான் தீர்மானிக்கும்’’ அவர் வியப்போடு என்னைப் பார்த்தார். அப்பொழுது நான் அவரிடத்தில் சொன்னேன்;
“நீங்கள் ஜாதகம் என்பது ஏதோ சில கணக்குகளின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்துவிடுவது என்று நினைக்கிறீர்கள். அது அப்படி அல்ல. 12ம் இடத்தின் தொடர்ச்சிதான் லக்னம் எனப்படும் முதல் இடம். அது ஒரு சுழற்சி. எளிதில் அறுபடாது. புனரபி ஜனனம் புனரபி மரணம். இதைப் புரிந்துகொள்ள முதலில் நம்முடைய கர்மா தியரி அதாவது வினைகள் பற்றிய கொள்கையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதை அடிப்படையாகக் கொண்டால்தான் வினை விளைவு நுட்பங்களை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, நம்முடைய ஜாதகங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கிரகநிலைகள் நிற்கின்றது.”
“ஆமாம்” (என்றார் அவர்)
“எதை அடிப்படையாக வைத்துக் கொண்டு அந்த கிரகங்கள் வந்து, ஒருவனுடைய பிறந்த நேரத்தில், ஜாதகக் கட்டத்தில் அமர்ந்து, ஒருவனுக்கு நன்மையையும், இன்னொருவருக்கு தீமையையும் செய்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்த்தீர்களா?’’ என்று கேட்டேன். அவர் சொன்னார்;
“பூர்வ ஜன்ம வினையின் காரணமாகத்தான் கிரகங்கள் நமக்கு நன்மை தீமைகளை ஊட்டும் வகையில் வந்து அமர்ந்திருக்கின்றன. (பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா) முன்வினை அடிப்படையில், கிரகங்கள்
அந்தந்த ஸ்தானங்களில் அமர்ந்து பலனைக் கொடுக்கின்றன’’
“மிகச் சரி. பழைய வினையின் அடிப்படையில் கிரகங்கள், பிறப்பு ஜாதகத்தில் அமைகின்றன. இங்கே ஒரு நுட்பமான கேள்வி. “பாரமாய பழவினை” என்பார்கள். பழைய வினையின் மொத்தத்தையும் ஒரு பிறவியில் அனுபவிக்க முடியாது. அதனால், அதன் ஒரு பகுதியாகத்தான் இந்தப் பிறவி அமைந்திருக்கிறது. அப்படியானால் பழைய வினையின் அளவுகள் என்ன? இந்தப் பிறவியில் அனுபவிக்கும் போது நாம் செய்கின்ற சில புதிய வினைகள் என்ன? என்பதையும் நாம் தீர்மானித்துத் தானே பதில் சொல்ல முடியும். பழைய வினைகளின் அளவை நாம் குறிப்பிட்ட ஜாதகத்தில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், நாம் இப்பொழுது செய்யும் காரியங்களுடைய அளவும் விளைவும் எப்படிப்பட்டது என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்வது? அதையும் தெரிந்து கொண்டால் தானே, இவருக்கு இந்த பிறவியோடு முடிந்துவிடுகிறதா, இல்லை அடுத்த ஒரு பிறவி இருக்குமா என்பதை எல்லாம் சிந்திக்க முடியும்’’ அதன் பிறகு அவருக்கு சில விவரங்களை சொன்னேன்.
“நம்முடைய வினைகள் மூன்று விதமாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இந்த கர்மா தியரியில், ஞானம் இல்லாமல் ஜாதகங்களை குறித்து நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியாது இந்த வினைகள் பழவினை, நுகர்வினை, எதிர்வினை என்று மூன்று விதமாகச் சொல்வார்கள். ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த பழவினையின் மொத்த அளவை நாம் நம்முடைய ஜாதகத்தின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது. அனுபவிக்கும் அளவைத்தான் (பிராரப்தம்) தெரிந்து கொள்ள முடியும். காரணம், கோடிக்கணக்கான பிறவிகள் செய்த நல்வினையின் தீவினையும் நம்முடைய பழைய கணக்கில் குவிந்து கிடப்பதாக நம்முடைய நூல்கள் கூறுகின்றன. அதில் ஒரு பகுதியை நன்மையும் தீமையும் கலந்து அனுபவிப்பதற்காகவே இந்த பிறவியை எடுத்து வந்திருக்கின்றோம். இந்த பிறவியினுடைய அமைப்பைச் சொல்வதுதான் ஜாதகம். ஆகையினால், அடுத்தொரு பிறவியைக் குறித்து இப்போதைக்குச் சிந்திக்க முடியாது’’
“அப்படியானால் பிறவியிலிருந்து விடுபட வழி?’’ என்று கேட்டார் நண்பர்.
“இங்கேதான் நம் ஆன்மிகம் வழி காட்டுகிறது. நம்முடைய ஆன்றோர்கள் இந்தப் பிறவியிலேயே விடுதலை அடைந்துவிடமுடியும் பிறப்பில்லாத பேரின்ப நிலையை அடைய முடியும் என்று சொல்வதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நீங்கள் இப்பிறவியை அனுபவிக்கும்பொழுதே இறைவனுடைய திருவருளைப் பெற்றுவிட்டால், அவன் பழைய வினைகளில் தொகுப்பை முடித்து வைத்து, உங்களுக்குப் பிறப்பில்லாத நிலையைத் தருகின்றான் என்பதுதான் நம்முடைய சமய நூல்களின் சித்தாந்தம். அதற்காகத்தான் நாம் நுகர்வினையை அதாவது பிராரப்த கர்மத்தை அனுபவிக்கின்ற பொழுது, எந்த விதத்திலும் பாதிப்படையாமல், நன்மைகளைச் செய்து எதிர்வினைகளை வரவழைத்துக்கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருந்தால், நம் பழவினைகள் மாறிவிடும். இதற்கு என்ன உதாரணம் என்று கேட்கலாம். ரமண மகரிஷி.
அவர் மிகச் சிறந்த புண்ணிய ஆத்மா. மற்றவர்களுக்கு வழிகாட்டியவர். ஞானி. ஆனாலும், தம் இறுதி காலத்தில் புற்று நோயினால் அவதிப்பட்டார். ஆனால், அந்த வலியைத் தாங்கிக்கொண்டார். அவருக்கு புற்றுநோய் வந்தது எதனால்? ஆயினும் அவர் தன்னுடைய வினைத்தொகுப்புகளை தம்முடைய தவத்தினாலும், புண்ணிய பலத்தினாலும் நிறைவு செய்துகொண்டு, நற்கதியை அடைந்தார்.
அவருடைய எதிர்காலத்தை அதாவது அடுத்த பிறவியை தீர்மானம் செய்தது அவருடைய இந்தப் பிறவியின் செயல்களே. இந்தப் பிறவியின் செயல்களை அவர் தன்னுடைய அறிவால், ஞானத் தால், பக்தியால், தவத்தால், மாற்றிக் கொண்டு செயல்பட்டதினால், பழைய வினைகளை அனுபவித்தாலும்கூட, எதிர்வினைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல், நற்கதியை அடைந்தார். எனவே, எதிர்காலத்திலே ஒரு பிறவி இருக்கிறதா இல்லையா என்பதை நாம் தீர்மானிக்கும் பொழுது, இப்பிறவியில் நாம் எப்படிச் செயல்படுகின்றோம் என்பதை கவனத்தில் கொண்டுதான் சொல்ல முடியும்.
விதியின் காரணமாக ஒருவன் ஆற்றில் விழுந்துவிட்டாலும்கூட, தன்னுடைய கை கால்களை அசைத்து முயற்சி செய்து, அதில் இருந்து மீண்டு கரை சேர்ந்துவிட முடியும். அந்த முயற்சிக்குத் துணையாக இறையருளைக் கொள்ள முடியும். “ஆற்றில் விழுவாய்” என்பது பழைய கர்ம வினையினால் வருவது. அது ஜாதகத்தில் சொல்லிவிட முடியும். ஆனால், அதிலே இருந்து மீண்டு வருவது என்பது நம்முடைய முயற்சியாலும், அந்த முயற்சியை ஊக்குவிக்கக்கூடிய இறைஅருளாலும்தான் முடியும்.
The post அடுத்த பிறவி உண்டா இல்லையா என்பதை எப்படித் தீர்மானிப்பது? appeared first on Dinakaran.