சரி இவருக்கு என்ன பெயர் வைப்பது?
தணிகையிலிருந்து வந்தவர் என்பதாலும், வேப்பமரத்தடியில் உள்ளதாலும், இவருக்குத் ‘தணிகை வேம்படி சக்தி விநாயகர்’ என்று பெயர் சூட்டினார்கள். அந்தத் தருணத்தில், இங்கு வருகை தந்த காஞ்சி மகா பெரியவர், இந்த விநாயகருக்கு ஆரத்தி காட்டி, இத்தலம் நல்ல முறையில் பிரபலமாகும், என்று ஆசிர்வதித்தார். மகானின் கருணையால் ஆலயம் மெல்ல வளர்ந்தது. இன்று ஆலயம் மிக அழகாக, திருமண மண்டபத்தோடு விளங்குகிறது. கோயில் மிகச் சிறியதுதான். உள்ளே சென்றவுடன் கருவறையில் கோயில் கொண்டுள்ள சக்தி விநாயகரைத் தரிசிக்கிறோம். இங்கு வந்தமர்ந்த நாள் முதல் தன்னை நாடி வந்தவர்களின் குறைகளை எல்லாம் தீர்த்தருளும் நாயகனாகத் திகழ்கிறார் இவர். இவருக்கு கொஞ்சம் அறுகம்புல் வைத்து வழிபட நல்ல கல்வி, வேலை கிடைப்பது உறுதி என்கிறார்கள், பலனடைந்தவர்கள். கல்யாணமாக வேண்டிய ஆண்களும் பெண்களும் தொடர்ந்து 48 நாள் இவருக்கு தீபமேற்றி வழிபட, விரைவில் திருமணம் நடந்தேறுகிறதாம். இவரை வணங்கி பிராகார வலம் வர சீதா – லட்சுமண சமேதராய் ராமனும் அவருக்கு எதிரே அனுமனும் வீற்றிருக்கிறார்கள். திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரும் நாகரும் நவக்கிரகங்களும்அருள்புரிகிறார்கள். அண்ணனுக்கு அருகிலேயே வள்ளி – தெய்வானையோடு சுப்பிரமணியரும் இருக்கிறார். கார்த்திகை தினத்தில் இவருக்கு தேனபிஷேகம் செய்து வழிபட்டால், நோய் நீங்கும் என்கிறார்கள். இத்தலத்தில் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் பக்தர்கள் பெருந்திரளாகக் குழுமியிருப்பார்கள். தம் பிரார்த்தனை நிறைவேறியவர்கள், இங்கு வந்து அன்னதானம் செய்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். வேம்பும் வில்வமும் தல விருட்சமாக உள்ள இத்தலத்தில், அருளை வாரி வாரி வழங்குகிறார் தணிகை வேம்படி சக்தி விநாயகர்.
எப்படி செல்வது?: சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் மார்க்கத்தில், பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து பத்து நிமிட நடைதூரத்தில் இருக்கிறது இத்தலம்.
The post கல்வியில் திருப்பம் தரும் திருத்தணிகை விநாயகர் appeared first on Dinakaran.