பள்ளிவாசலில் மட்டும்தான் இறைவனா?

“தாடி வச்சுகிட்டு ஐந்து வேளை தொழுவுற…ஆனா இப்படிப் பொய் பேசுறியே?”

“கொடுத்த வாக்கைக் காப்பாற்றாத நீயெல்லாம் ஒரு தொழுகையாளியா?”

“ஹாஜியார் என்ற பட்டம். ஆனால் மகன் நிகாஹ்வுக்கு ஏகப்பட்ட வரதட்சணை கேட்கிறார்…”

இப்படிப்பட்ட உரையாடல்களை ஆங்காங்கே கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

இறைவனின் கட்டளையை மனமார ஏற்று, ஐவேளை முறையாகத் தொழுபவர் பொய் பேசுபவராகவும் வாக்குறுதியை மீறுபவராகவும் இருக்க முடியுமா? இருக்கிறார்கள், இது நடைமுறை உண்மை.

சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான புகழ்பெற்ற இதழாசிரியர் ஒருவர் சிறந்த ஆன்மிகவாதி.

தனிவாழ்வில் ஒழுக்கத்தைப் பேணி வாழ்ந்தவர். அந்நியப் பெண்களின் முகத்தை ஏறிட்டும் பார்க்காதவர்.

தமக்குக் கீழ் பணியாற்றும் உதவி ஆசிரியர்களும் ஆன்மிகத்தில் கவனம் செலுத்த வேண்டும்; தியானப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டுமென்று விரும்பியவர். ஆனால், அவர் நடத்திய இதழ் எப்படி இருந்தது தெரியுமா?

பக்கத்திற்குப் பக்கம் பெண்களின் கவர்ச்சிப் படம்; அரைகுறை ஆடை களில் நடிகைகளின் படங்கள்; வரம்பு மீறிய பாலுணர்வுக் கதைகள்..! ‘இந்த இதழின் ஆசிரியர் ஓர் ஆன்மிகவாதி’ என்று சத்தியம் செய்தால்கூட யாரும் நம்பமாட்டார்கள்.

இந்தக் கோளாறுகளுக்கு என்ன காரணம்?

‘இறைவன், வழிபாடு, இறைச்சட்டங்களைப் பேணுதல் என்பனவெல்லாம் தனிவாழ்வில் இருந்தால் போதும்; பொது வாழ்வுக்குத் தேவையில்லை’ எனும் கருத்தோட்டம்தான் இந்தக் குழறுபடிகளுக்குக் காரணம்.

அந்தக் கருத்து அழுத்தமாக மனத்தில் பதிந்திருப்பதால்தான் ஓர் ஆன்மிகவாதியால் அரைகுறை ஆடைகளுடன் நடிகைகளின் படங்களைத் தம் இதழில் வெளியிட முடிகிறது. ஒரு தொழுகையாளியால் பொய் பேசவும் வாக்குறுதியை மீறவும் முடிகிறது.

அதாவது, தங்களின் தனிப்பட்ட வாழ்வில் இறைவனை ஏற்றுக்கொண்டவர்கள் சமுதாய, கூட்டு வாழ்வில் இறைவனைப் புறந்தள்ளி விடுகிறார்கள்.

“பள்ளிவாசலில் – இறை ஆலயத்தில் மட்டும்தான் நான் இறைவனுக்கு அடிமை, ஆலயத்தை விட்டு வெளியே வந்தவுடன் மனம்போன போக்கில் செயல்படுவேன்” எனும் மனநிலைதான் இன்றைய சமுதாயத் தீங்குகளுக்கெல்லாம்
முதன்மைக் காரணம்.

“தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வேன்; அவனுடைய சட்டங்களையே பின்பற்றுவேன்” எனும் உறுதி ஒருவரிடம் இருக்குமானால் மோசடி செய்பவராகவோ, பித்தலாட்டக்காரராகவோ இருக்கமாட்டார்.

இப்போது நம் முன் உள்ள வினா இதுதான்: பள்ளிவாசலுக்குள் மட்டும் இறைவனுக்கு அடிபணிந்தால் போதுமா? வாழ்வின் எல்லா நிலைகளிலும், எல்லாத் துறைகளிலும் அவனுக்குப் பணிந்து வாழப் போகிறோமா?

இந்த வினாவுக்கு நாம் தரும் விடையில்தான் நம்முடைய இம்மை – மறுமை வெற்றி அடங்கியுள்ளது.

– சிராஜுல் ஹஸன்.

இந்த வாரச் சிந்தனை

“இறைநம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் இறைநெறியில் முழுமையாக நுழைந்துவிடுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்.”
(குர்ஆன் 2:208)

The post பள்ளிவாசலில் மட்டும்தான் இறைவனா? appeared first on Dinakaran.

Related Stories: