நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கிளியாற்றில் பள்ளி மாணவர் மாயம்: உறவினர்கள் திடீர் சாலை மறியல்

மதுராந்தகம், டிச. 16: மதுராந்தகம் ஏரியில் இருந்து கிளியாற்றில் வெளியேறும் உபரிநீரில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். மாணவனை தீயணைப்பு போலீசார் தேடி வரும் நிலையில் உறவினர்கள் திடிர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுராந்தகம் ஏரியிலிருந்து சுமார் 5000 கனஅடி உபரிநீர் கிளியாற்றில் வெளியேறி வருகிறது. இந்நிலையில், கிளியாற்றின் அருகில் உள்ள மலைப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவன் புவனேஷ் (17) என்பவர் நண்பர்களுடன் நேற்று பிற்பகலில் இந்த ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது, அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக அவர் நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டுள்ளார். நீண்ட நேரமாகியும் புவனேஷ் வெளியில் வராததை கண்டு அவரது நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர்.  இதையடுத்து, அவரது உறவினர்கள், நண்பர்கள் உடனடியாக மதுராந்தகம் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில், தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு தேடி வருகின்றனர். இந்நிலையில், கிளியாற்றில் குளித்து மாயமான மாணவனை விரைந்து கண்டுபிடிக்க கோரி மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மதுராந்தகம் போலீசார் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

The post நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கிளியாற்றில் பள்ளி மாணவர் மாயம்: உறவினர்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: