முதல் கட்டமாக, மாமல்லபுரம்-முகையூர் இடையே 32 கிமீ தூரம் 4 வழிச்சாலை அமைகிறது. அதைத்தொடர்ந்து, 2வது கட்டமாக முகையூர்-மரக்காணம், 3வது கட்டமாக மரக்காணம்-பாண்டிச்சேரி இடையே 4 வழிச்சாலையாக மாற்றும் பணி அடுத்தடுத்து நடக்க உள்ளது. இதில், கூவத்தூர் அடுத்த வடபட்டினம், மரக்காணம் அடுத்த தேன்பாக்கம், பாண்டிச்சேரிக்கு அருகே ஒரு சுங்கச்சாவடி என மொத்தம் 3 சுங்கச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி, கடம்பாடி, மணமை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 4 வழிச்சாலை பணி நடந்து வருகிறது.
மேலும், கடம்பாடி இசிஆரில் இருந்து ஊருக்கு செல்ல 9 அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டு, அங்கு கடந்த மாதம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்தது. இதையறிந்த, கடம்பாடி ஊராட்சி தலைவர் தேன்மொழி சுரேஷ்குமார், திருக்கழுக்குன்றம் திமுக ஒன்றிய துணை செயலாளர் கே.கே.பூபதி மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் சென்று, 9 அடி உயரத்தில் சுரங்கப்பாதை கட்டினால் அரசு பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கிக் கொள்ளும். அதனால், 9 அடி உயரத்தில் இருந்து 12 அடியாக உயர்த்தி அமைக்க வேண்டும்.
இல்லையென்றால், நாங்கள் அமைக்க விடமாட்டோம் என எச்சரித்தனர். மேலும், இது சம்பந்தமாக அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலெக்டர் அருண்ராஜ், சப்-கலெக்டர் நாராயண சர்மா ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.
இந்நிலையில், ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று கடம்பாடி பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து, 9 அடியில் இருந்து 12 அடியாக உயர்த்தி சுரங்கப்பாதை அமைக்கப்படும் என உறுதியளித்தனர். ஆய்வின்போது, திருக்கழுக்குன்றம் திமுக ஒற்றிய துணை செயலாளர் கே.கே.பூபதி, கடம்பாடி ஊராட்சி தலைவர் தேன்மொழி சுரேஷ்குமார் மற்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடனிருந்தனர்.
The post மாமல்லபுரம் – புதுச்சேரி 4 வழிச்சாலை பணி கடம்பாடி சுரங்கப்பாதை உயரம் 12 அடியாக உயர்வு: ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.