டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் தம்பிதுரை ஆதரித்தார். அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்த சட்டத்தைத்தான் அதிமுக ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது.
அதிமுகவின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது.
தம்பிதுரை ஆதரித்தது எந்த திருத்தத்தை? மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அதிமுக ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா? இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி புளுகும் – புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
* அதிமுக எம்.பி. தம்பிதுரையின் நாடாளுமன்ற உரை வீடியோ வைரல்
நாடாளுமன்றத்தில் அதிமுக ராஜ்யசபா எம்.பி தம்பிதுரை டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஆதரவாக பேசும் வீடியோ இளையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: ஒன்றிய அமைச்சர் கொண்டு வந்த இந்த திட்டத்தை வரவேற்கிறேன். தமிழகத்தில் வளங்களை பலர் சுரண்டி வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் மற்றும் கேரளாவில் இதற்காக தனியாக ஏலம் நடப்பதில்லை. குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அவர்களுக்காக, சொந்த தேவைக்காக வளங்களை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பேசினார். ஆனால் மாநிலங்களவையில் அதிமுக எம்பியும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான தம்பிதுரை ஒன்றிய அரசின் சுரங்க அனுமதிக்கு ஆதரவாக பேசும் வீடியோ தற்போது வெளியாகியிருப்பது, அவர்களது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
The post பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்க முடியாது அதிமுக செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல் appeared first on Dinakaran.