கடலூர் மாவட்டத்தில் புயல், வெள்ள பாதிப்பு சேதங்கள் குறித்து வீடியோ தொகுப்பு பதிவு

* ஒன்றிய ஆய்வு குழு பார்வை

* 1,108 இடங்களில் கரை உடைப்பு

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல், மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த வீடியோ தொகுப்பு பதிவை ஒன்றிய ஆய்வு குழுவினர் பார்வையிட்டனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பல்துறை ஒன்றிய குழு-ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் முனைவர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர், சிறப்பு கண்காணிப்பு அலுவலரும் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளருமான ககன்தீப் சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையரும், கூடுதல் தலைமை செயலாளருமான ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, அரசு முதன்மை செயலாளர், தமிழ்நாடு மின்பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனருமான மோகன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

பெஞ்சல் புயலின் காரணமாக பெய்த மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 150 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக தென்பெண்ணையாறு, கெடிலம், வடக்கு மலட்டாறு, தெற்கு மலட்டாறு, மத்திய மலட்டாறு, 77 குளங்கள், 782 கால்வாய் பகுதிகள் என மொத்தம் 1,108 இடங்களில் கரைகள் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தன. 24,377 பொதுமக்களை மீட்டு 35 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட 3,14,512 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. 63,825 நபர்களுக்கு மளிகைப்பொருட்கள் மற்றும் அடிப்படை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நோய்த்தொற்று ஆகாத வகையில் 1,113 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவின் மூலம் 406 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 26,247 நபர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறை மூலம் 203 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 39,194 கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் 161 கிராமங்களில் 2,674 நபர்களை கொண்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால் 36 குடிசை வீடுகள் முழுவதுமாகவும், 1,431 குடிசை வீடுகள் பகுதியளவிலும், 364 இதர வீடுகளும் சேதமடைந்துள்ளன. மேலும், வெள்ள பாதிப்பால் 360 மின்கம்பங்கள் சேதங்கள் ஏற்பட்டதை 1,843 பணியாளர்களை கொண்டு மின்துறை மூலம் தற்போது வரை 250 மின்கம்பங்கள் நடப்பட்டு அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் வெள்ள பாதிப்பால் நெல், மணிலா, கரும்பு உள்ளிட்ட வேளாண் பயிர்கள் 82,375 ஹெக்டர் நிலங்களும், 19,935 ஹெக்டர் தோட்டக்கலை பயிர்களும் வெள்ளநீர் சூழ்ந்ததை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 57 இடங்களில் 84.58 கிலோமீட்டர் நீளத்திற்கான சாலைகள் சேதமடைந்தன. 27 இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 5 குடிநீர் திட்டப்பணிகளில் ஏற்பட்ட உடைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள், சேதங்கள், மீட்பு நடவடிக்கைகள், நிவாரண பொருட்கள் வழங்கிய விவரங்கள் வீடியோ பதிவுகளாக தொகுக்கப்பட்டு பல்துறை ஒன்றிய குழுவினர் பார்வைக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

The post கடலூர் மாவட்டத்தில் புயல், வெள்ள பாதிப்பு சேதங்கள் குறித்து வீடியோ தொகுப்பு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: