பெரம்பலூர்,டிச.9: இந்திய அரசு, பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து பெரம்பலூர் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா 2024 என்ற நிகழ்ச்சியானது பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து \”புதுமை தொழில்நுட்பம்\” என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி குழு போட்டியாகவும், தனிநபர் போட்டியாகவும், \”ஒரு பொறுப்புள்ள குடிமகனின் கடமைகள்\” என்ற மையக் கருத்தை வலியுறுத்தி, இளையோர்களுக்கான பேச்சுப்போட்டியும், \”காலனித்துவ மனப் பான்மையின் எந்தத் தடயத்தையும் அகற்றுதல்\” என்ற தலைப்பில் இளம் ஓவியர்களுக்கான வரைதல் போட்டியும், ‘பாரம்பரிய நடனம்\” என்ற தலைப்பில் கிராம நடனப் போட்டியும், \”வளர்ந்த இந்தியாவை தீர்மானித்தல்\” என்ற தலைப்பில், இளம் எழுத்தாளர்களுக்கான கவிதைப் போட்டியும், செல்போன்களில் புகைப்படம் எடுத்தல் போன்ற பல்வேறு விதமான 7-வகையான போட்டிகள் நடைபெற்றது. மதியம் பேச்சுப் போட்டியும், கிராமிய குழு நடன போட்டிகளும் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நேரு யுவகேந்திராவின் பெரம்பலூர் மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா தலைமையில், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் இராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில், பல்வேறு கலைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
The post மாவட்ட அளவிலான இளையோர் திருவிழாவில் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கல் appeared first on Dinakaran.