சிதம்பரம்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல சுங்க கட்டணம்: வரும் 23ம் தேதி முதல் அமல்

புவனகிரி: சிதம்பரம்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வருகிற 23ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம்- நாகை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில் கடலூர் மாவட்டம் பூண்டியாங்குப்பம் கிராமத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் வரை ஒவ்வொரு பிரிவாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து முடிந்துள்ளது. பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த வழித்தடத்தில் ஏராளமான வாகனங்களும் சென்று வருகின்றன.

இந்த தேசிய நெடுஞ்சாலையில்தான் சிதம்பரம்- கடலூர் பிரதான சாலை செல்கிறது. சிதம்பரம்- கடலூர் சாலையில் பல்வேறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள், ரயில்வே பாலம், ஆற்று பாலங்கள் உள்ளிட்ட ஏராளமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் புவனகிரி அருகே உள்ள கொத்தட்டை கிராமத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டாலும் இதுவரை சுங்கச்சாவடி முறைப்படி திறக்கப்படாததால் கட்டணம் வசூலிக்கப்படாமல்தான் இருக்கிறது. அதனால் இந்த சுங்கச்சாவடியில் கட்டணமின்றி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் கடலூர்- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கொத்தட்டையில் உள்ள சுங்கச்சாவடியில் வரும் 23ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கொத்தட்டையில் உள்ள சுங்கச்சாவடியில் டிஜிட்டல் பலகை மூலம், சுங்கச்சாவடி கட்டணம் வரும் 23ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு மட்டும் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் வாகனங்களுக்கான கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படும் என்ற விவரங்கள் இதுவரை வைக்கப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமான நகாய் நிறுவனத்தின் சார்பில் செய்தித்தாளில் கொடுக்கப்பட்ட பொது அறிவிப்பு ஒன்றில், எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற விபரம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் 23ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள்ளாக இந்த இடத்தில் எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணங்கள் என்ற விவரம் எழுதப்படும் என தெரிகிறது.

The post சிதம்பரம்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல சுங்க கட்டணம்: வரும் 23ம் தேதி முதல் அமல் appeared first on Dinakaran.

Related Stories: