பழநி: பழநி மலைக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று மாலை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்துதல் வரும் 13ம் தேதி நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உள்ளது. இங்கு திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று மாலை 5.30 மணிக்கு சாயரட்ச பூஜை மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30க்கு சண்முகர் தீபாராதனை, 6.45க்கு சின்னகுமாரர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல், 7.30க்கு தங்கரத புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.
வரும் 12ம் தேதி பரணி தீபம் ஏற்றப்படும். மறுநாள் மகாதீபம் ஏற்றுதல் நடைபெறும். இதையொட்டி அன்று காலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் விசேஷ பூஜை நடைபெறும். பிற்பகல் 2 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்ச பூஜையும், 4.45க்கு சின்னகுமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், யாகசாலை தீபாராதனையும் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து மலைக்கோயிலில் நான்கு மூலைகளிலும் தீபம் வைக்கப்படும். மாலை 6 மணிக்கு மலைக்கோயிலில் மேற்கு பிரகாரத்தில் உள்ள தீபக்கம்பத்தில் மகாதீபம் ஏற்றுதல் மற்றும் சொக்கப்பனை கொளுத்துதல் நடைபெறும். இதைத் தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயிலிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.
தங்கரத புறப்பாடு நிறுத்தம்: திருக்கார்த்திகை திருநாளையொட்டி டிச.13ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை. கார்த்திகை தீபம் ஏற்றிய பின் மாலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் யானைப் பாதையையும், தரிசனம் முடித்து கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதையையும் பயன்படுத்தும் வகையில், ஒருவழிப்பாதையாக மாற்றப்படும். மேலும் 13ம் தேதி தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. 14ம் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பழநி மலைக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று மாலை தொடங்கியது: 13ம் தேதி மகா தீபம், சொக்கப்பனை appeared first on Dinakaran.