நாயக்கன்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா ? எதிர்பார்ப்பில் மாணவர்கள்

வாலாஜாபாத்: நாயக்கன்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என அப்பள்ளியின் மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் நாயக்கன்பேட்டை ஊராட்சியில் உள்ளது. இங்கு, 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், ஊராட்சியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், இ-சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இந்நிலையில், நாயக்கன்பேட்டை ஊராட்சியின் மையப் பகுதியில், அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் விளையாட்டு மைதானம் உள்ளது. தற்போது, இந்த மைதானத்தில் தான் மாவட்ட, ஒன்றிய அளவிலான பள்ளி விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், சுற்றுவட்டார கிராமப்புற இளைஞர்களும் விடுமுறை நாட்களில் இங்கு தான் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த விளையாட்டு மைதானம் முறையாக பராமரிக்கப்படாததால் சிறிய அளவிலான முள் செடிகள் முளைத்துள்ளன. இதனால், இங்கு விளையாடும் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்களும் இந்த மைதானத்திற்கு வருவதை தவிர்க்கின்றனர்.

அப்பகுதி கிராமமக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கன்பேட்டை ஊராட்சி இங்குள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மைதானம் உள்ளன. இந்த மைதானத்தில் சுற்றுவட்டார கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இங்குள்ள வயதானவர்களும் நடைபயிற்சி உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சி நாள்தோறும் செய்து வருகின்றனர். இந்த மைதானம் தற்போது முறையாக பராமரிக்கப்படாததால் மைதானம் முழுவதும் முட்புதர்கள் முளைத்து சிறிய சிறிய முள்களும் காணப்படுகின்றன. இதனால், இங்கு விளையாட வரும் இளைஞர்களும் நடை பயிற்சிக்காக வரும் முதியோர்களும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற நிலையில் பள்ளி கல்வித்துறை மைதானத்தை சீரமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே, மாவட்ட நிர்வாகம் இங்கு ஆய்வு மேற்கொண்டு இங்குள்ள மைதானத்தை சீரமைத்து இப்பகுதி பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயனுள்ளதாக மாற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post நாயக்கன்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா ? எதிர்பார்ப்பில் மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: