நிலப்பரப்பும், கடல் பரப்பும் சமமாக இருப்பதால் தான் எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும் மழைநீர் தேக்கத்தை உடனடியாக வெளியேற்ற முடியாத நிலை இருந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் தான் கடந்த காலங்களில் சிறு மழைக்கே சென்னை மிதக்கும் நிலை ஏற்பட்டது. ஆனாலும், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, எவ்வளவு மழை பெய்தாலும் வேகமாக வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் திட்டம் சென்னையின் மழைநீர் தேக்கத்தை கட்டுப்படுத்த பெரிய அளவில் பலன் தந்து வருகிறது. இதேபோன்று, மழைநீரை வெளியேற்றக்கூடிய கால்வாய்களை தூர்வாரியும், விரிவுபடுத்தி சுற்றுச்சுவர் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை காலம் நடந்து வருகிறது.
இந்த காலகட்டத்தில் சென்னை எந்த அளவிற்கு பாதிப்புகளை சந்திக்கப் போகிறதோ, என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. குறிப்பாக வேளச்சேரி, மடிப்பாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மழை காலங்களில் வெள்ளநீரில் தத்தளிக்கும் நிலை காணப்படுகிறது. இதற்கு சரியான திட்டமிடப்படாத நகர கட்டமைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. குறுக்கும் நெடுக்குமாகவும், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்தும் குடியிருப்புகளும், அரசு மற்றும் தனியார் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.
கட்டுமானங்கள் அதிகரித்ததன் காரணமாக மழைநீர் செல்ல வழியில்லாமல் போய்விடுகிறது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, அவ்வப்போது சீரமைக்கப்பட்டு வந்தாலும் கூட, பருவமழைக் காலம் வந்தாலே சென்னை மக்களுக்கு வெள்ள அபாயமும் வந்துவிடுகிறது. எனவே இருக்கும் சூழலை சமாளிக்க மாற்று ஏற்பாடுகளை முடுக்கி விட வேண்டியுள்ளது. அந்த வகையில் மழைநீர் வடிகால்கள் அகலப்படுத்துதல், தூர்வாறுதல், நீர்நிலைகளை பராமரித்தல், புதிய நீர்நிலைகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுப்பதற்காக சில முக்கிய திட்டங்களை கையில் எடுத்துள்ளது. அதன்படி, பெருமழை காலங்களில் கால்வாய்களில் தேவையான அளவு மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய்களின் குறுக்கே தற்போதுள்ள குறுகிய பாலங்களை இடித்துவிட்டு, உயர்த்திக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன் மூலம் அதிக நீர் செல்ல முடியும் என்பதால் தண்ணீர் தேங்குவது தடுக்கப்படும்.
அதாவது, சென்னையில் நீர்வளத்துறை வசமிருந்த வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 6.5 கி.மீ நீளமுள்ள விருகம்பாக்கம் கால்வாயில் இருக்கும் குறுகிய பாலங்களால் 1,700 கன அடி நீர் செல்ல வேண்டிய இடத்தில் 800 கன அடி மட்டுமே செல்கிறது. இந்த பிரச்னையை சரி செய்தால் தான் வெள்ள நீரை வேகமாக வெளியேற்ற முடியும். எனவே, விருகம்பாக்கம் கால்வாயில் இருக்கும் 12 குறுகிய பாலங்களை இடித்து உயர்த்திக் கட்ட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேபோன்று, வடபழனி 100 அடி சாலையில் ஒவ்வொரு முறையும் மழையால் தண்ணீர் தேங்குவதற்கு, கால்வாயில் அதிக தண்ணீர் செல்ல முடியாததே காரணமாக இருக்கிறது. இதற்கு காரணமான, கால்வாயில் குறுக்கே உள்ள குறுகிய பாலங்களை இடித்து உயர்த்திக் கட்டப்பட உள்ளது. இதேபோல, வேளச்சேரியில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கு தீர்வாக 2.78 கி.மீ தூரத்திற்கு வீராங்கல் ஓடையின் பக்கவாட்டு சுவரை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், ஓடையில் தற்போது செல்லும் தண்ணீரை விட 25 சதவீதம் தண்ணீர் கூடுதலாக செல்ல வழிவகை செய்யப்படும். எனவே இந்த பாலங்களையும் இடித்து உயர்த்தி கட்டும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. இதுபோன்ற திட்ட பணிகளால் பெருமழை காலங்களில் அதிக அளவில் தேங்கும் வெள்ள நீர் வேகமாக வெளியேற முடியும். குடியிருப்புகளுக்குள் மழைநீர் சூழ்வதும் தடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
* 25 லட்சம் மக்களுக்கு பாதுகாப்பு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மழைநீர் தேக்கத்தை தடுக்க முக்கியத்துவம் ெகாடுக்கப்பட்டு அதற்கான திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் விருகம்பாக்கம் கால்வாய், வேளச்சேரி வீராங்கல் ஓடை கால்வாய், வடபழனி 100 அடி சாலையில் உள்ள கால்வாய் ஆகிய கால்வாய்களில் உள்ள குறுகிய பாலங்களை இடித்து உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் வரும் 2025 பிப்ரவரி மாதத்துக்குள் முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடியும் பட்சத்தில், கால்வாய் அருகே வசிக்கும் சுமார் 25 லட்சம் மக்கள், மழை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுக்காக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
The post மழை வெள்ள பாதிப்பை தடுக்க குறுகிய பாலங்களை உயர்த்த முடிவு: பிப்ரவரிக்குள் பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி தீவிரம் appeared first on Dinakaran.