கோலாலம்பூரிலிருந்து கடத்தி வந்த 5400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: சென்னையில் 2 பயணிகள் கைது

சென்னை: கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்புள்ள சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, சுங்க அதிகாரிகள் 2 கடத்தல் பயணிகளை கைது செய்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று, நேற்று முன்தினம் காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் பரிசோதித்து, உடைமைகளை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ரமேஷ் ஆகாஷ் (29), தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய 2 பேர், சுற்றுலா பயணிகளாக மலேசியா சென்றுவிட்டு விமானத்தில் திரும்பி வந்தனர்.

அவர்கள் மீது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருவரையும் நிறுத்தி விசாரித்து, அவர்களது உடைமைகளை சோதித்தபோது, அட்டைப் பெட்டிகளுக்குள் சுமார் 5,400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது. பின்னர் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் குளிர் பிரதேசமான தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகள் போன்ற இடங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இவைகளை பெரிய பங்களாக்களில், அலங்கார தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். அதோடு இவைகள் மருத்துவ குணங்கள் உடையவை. எனவே மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இதையடுத்து 5,400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகளை மீண்டும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற தனியார் பயணிகள் விமானத்தில், 5,400 அலங்கார நட்சத்திர ஆமைகளும், மலேசிய நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை கடத்தி வந்த 2 பேரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஜாமீனில் வெளியில் வர முடியாதபடி, காபிபோசா சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post கோலாலம்பூரிலிருந்து கடத்தி வந்த 5400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: சென்னையில் 2 பயணிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: