காஞ்சிபுரம்: சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரும் மனு மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தை துவங்கி அதை பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்கள் தொழிற் சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி சங்கத்தின் சார்பில் சிஐடியு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் சாம்சங் நிறுவனம் பெயரில் தொழிற்சங்கம் துவங்க அந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கு நேற்று நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது சாம்சங் நிறுவனம் சார்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், தங்கள் நிறுவனத்தில் அரசியல் தலையீடு இருக்க கூடாது என்றும், நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் துவங்குவது அடிப்படை உரிமை அல்ல என்றும் தெரிவித்தார். தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், தொழிற்சங்க சட்டத்தின் கீழ் சங்கத்தை பதிவு செய்வது அடிப்படை உரிமை என்றும் கொரியாவில் கூட சாம்சங் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் இதுகுறித்து சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று பதிலளித்தார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தொழிற்சங்க அங்கீகாரம் தொடர்பான மனுவை 6 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்குமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
The post சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய கோரும் மனு மீது முடிவெடுக்க வேண்டும்; பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.